b>நிவேதிதா லூயிஸ்
நண்பர்களுடனான அரட்டைகள் எப்போதாவது போகிற போக்கில் ஒரு புதையலின் பக்கம் நம்மை நெட்டித் தள்ளிவிடுவதுண்டு. “அவள் அப்படி ஒரு பேரழகி தெரியுமா?” என்று நண்பர் விவரித்தபோது விழிவிரிய கேட்டுக்கொண்டேன். கையோடு கூகுளில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியபோது வந்து விழுந்த முதல் புகைப்படத்தில் நான் காலி. அத்தனை அழகு. அசரடிக்கும் அழகு. கறுப்பு வெள்ளைப் புகைப்படமா, ஓவியமா என்று என்னை நானே கிள்ளிக்கொண்ட வேளையில் ரவிவர்மா சோம்பல் முறித்து என்னைப் பார்த்துச் சிரித்தான். மொபைலுக்குள்ளிருந்து அவரும்தான்.
மூக்கில் அணிந்திருந்த நத்து அவரது மராத்திய மரபைச் சுட்டியது. சட்டென ரசனைத்திரை விலக்கி நண்பர் சொல்வதை உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்தேன். “ஒரு பாடல் இருக்கிறது. அதில் ஆரத்தி சுற்றுவார். அந்த ஒளியில் அப்படியே தேவதை போல ஜொலிப்பார்”. நான் வேறு பக்கங்களை அலசிக்கொண்டே இருந்தேன். அவரது கதையைச் சொல்லும் சினிஸ்தான் பக்கத்தில், அவர் பாடிய ஆங்கிலப் பாடலின் காணொலிக் காட்சி வந்தது. வி.சாந்தாராம் இயக்கிய ‘துனியா நா மானே’ படத்தில் ‘சாம் ஆஃப் லைஃப் (Psalm of Life)’ என்ற அமெரிக்கக் கவிஞர் ஹென்றி வாட்ஸ்வொர்த் இயற்றிய [பாடல்](https://www.youtube.com/watch?v=2wqhfKNMPTs&feature=youtu.be)அது. வெளிநாட்டு ஆப்ரா பாடகிகள் தோற்கும் அளவுக்கு அந்தக் குரலில் அத்தனை உயிர்!
நண்பர் சொன்ன ‘துனியா நா மானே’ படத்தின் ‘ஜெயதேவி மங்களகௌரி’ பாடலைப் பார்க்க ஆரம்பித்தேன். கைகளில் ஆரத்தித் தட்டை ஏந்தி, கண்களில் ஒளி மின்ன, ஜெயதேவி பாடிக்கொண்டிருந்த ஓவியம் கண்டிப்பாக ரவிவர்மா வரைந்ததுதான் என்று ஒரு நொடி விக்கித்துப் போனேன். ரவியைப் போலவே ஓவியங்கள் தீட்டிய எஸ்.எல்.ஹல்தன்கரின் ‘குளோ ஆஃப் ஹோப்’ ஓவியம் உயிர்பெற்றதைப்போல [ஜெயதேவி மங்களகௌரி](https://www.youtube.com/watch?v=CHB-egeqW8U) பாடிக்கொண்டிருந்தார் அவர் – சாந்தா ஆப்தே.
தெற்கிலிருந்து வடக்கே சென்று பாலிவுட்டைக் கலக்கிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் ஒருபக்கம் என்றால், அங்கிருந்து இங்கு வந்து கோலோச்சிய நடிகைகளில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் சாந்தா.
மொபைலில் விரல்கள் தேயத் தேடியதில் கிடைத்தது சாந்தா எவ்வளவு சாந்தமானவர் என்ற செய்தி. ஃபிலிம் இந்தியா இதழின் ஆசிரியர் பாபுராவ் படேலை அவரது அலுவலகத்திலேயே சாட்டையால் வெளுத்து வாங்கியிருக்கிறார் சாந்தா. காரணம், சாந்தா பற்றி அவர் எழுதிய அவதூறு செய்தி. ஆனால், சாந்தா தன்னை சாட்டையால் அடித்ததையும் மறைக்காமல் அடுத்த ஃபிலிம் இந்தியா பதிப்பில் பாபுராவ் எழுதினார்.
1940ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் கூட்டம் ஒன்றுக்கு பேன்ட் சட்டை அணிந்துவந்து கலக்கினார் என்று ஒரு துருப்புச் சீட்டு கிடைக்க, அடடா… மதராஸில் சாந்தாவா என்று ஆர்வமானேன். மேலும் தேடியதில் 1938ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அன்று சென்னை பிராட்வே டாக்கீஸில் பூனாவின் பிரபாத் பிக்சர்ஸ் தயாரிப்பான “கோபால் கிருஷ்ணா” என்ற திரைப்படம் வெளியீடு என்ற செய்தி அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கிடைத்தது. அதில் “சாந்தா ஆப்தே” நடிக்கும் என்ற கொட்டை எழுத்து விளம்பரம் நம்மை ஈர்க்கிறது. அடுத்த வாரம், அக்டோபர் 7 அன்று எஸ்.சத்யமூர்த்தி எம்.எல்.ஏ முன்னிலையில் படம் திரையிடப்படும் என்ற விளம்பரம் கண்ணைப் பறிக்கிறது.
*படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், கூகுள்*
அக்டோபர் 24 தேதியிட்ட எக்ஸ்பிரஸ் இதழில், வரும் 26ஆம் தேதி “இந்தியாவின் நட்சத்திரம்” சாந்தா ஆப்தே மதராஸ் வரவிருப்பதாகவும், அவரை வரவேற்க தயாராகுமாறும் ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. அதற்கு மதராஸ் வாழ் மக்களின் வரவேற்பு உண்மையில் பிரமிக்க வைக்கிறது. 26ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கெல்லாம் கோபால் கிருஷ்ணா திரையிடப்படும் பிராட்வே டாக்கீஸின் முன் 2,000 பேர் சாந்தாவைக் காண கூடியிருந்ததாகச் சொல்கிறது அடுத்த செய்தி.
*படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், கூகுள்*
1938 அக்டோபர் 26 அன்று காரில் பெங்களூரிலிருந்து மதராஸ் வந்த சாந்தா, 7 மணிக்கு பிராட்வே டாக்கீஸ் வந்து சேர்ந்தார். அவருடன் அவரது சகோதரர், சகோதரி, ஜயந்திலால் தாக்கூர் மற்றும் மாதண்ணா ஆகியோர் இருந்ததாகவும், அவரை எம்.டி.ராஜன், சி.பி.சாரதி மற்றும் டி.கண்ணபிரான் ஆகிய மூவரும் மாலை அணிவித்து வரவேற்றதாகவும் செய்தி இருக்கிறது. மூன்று நிமிடங்கள் மானேஜர் அறையில் இருந்த சாந்தா, உடனடியாகக் கிளம்பி, தான் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்றுவிட்டார். “சாந்தா ஆப்தே கி ஜெய்” என்று கூட்டம் ஆர்ப்பரித்தது. இந்த 2,000 பேர் போக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர் ரயிலில் வந்து இறங்குவார் என்று நம்பி பலர் காத்திருந்து ஏமாந்து திரும்பியிருக்கிறார்கள். நகைக் கடைத் திறப்புக்கு நடிகை வந்ததால் தள்ளுமுள்ளு, நயன்தாராவைப் பார்க்கக் கூடிய கூட்டம் என்று இப்போதைய இளைஞர்களை கிண்டல் செய்கிறோம். ஆனால் பாருங்கள்… நம் முப்பாட்டன் காலந்தொட்டே நமக்கு நடிகைகளைக் கூட்டம் கூடி, ஆவென்று வாய் பிளந்து பார்க்கும் பாரம்பரியம் இருந்திருக்கிறது.
மூன்று நாட்கள் சென்னையில் தங்குவதாகவும், அதன்பின் தென்னிந்திய சுற்றுப்பயணம் ஒன்றை சாந்தா செய்யவிருப்பதாகவும் தகவல் தருகிறது செய்தித்தாள். “உங்கள் கனவு நிறைவேறப் போகிறது; நீங்கள் கேட்கவும் பார்க்கவும் ஆசைப்பட்ட உங்கள் சாந்தா ஆப்தேயைக் காண வாருங்கள்” என்று விளம்பரம் செய்யப்பட்டது. அக்டோபர் 28 அன்று 6.15 மற்றும் 9 மணிக் காட்சிகளில் சாந்தா நேரில் தோன்றுவார் என்றும் முன்னாள் மதராஸ் ஆளுநர் கே.வி.ரெட்டி மற்றும் சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர்.ஸ்ரீனிவாசன் இருவரும் இந்த நிகழ்ச்சிகளைத் தலைமை தாங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
*படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், கூகுள்*
*படம்: கெட்டி இமேஜஸ்*
விழாவில் கலந்துகொண்ட சாந்தாவுக்கு அழகிய வெள்ளிப் பேழை ஒன்றை பிராட்வே டாக்கீஸின் உரிமையாளர்களான மெட்ராஸ் தியேட்டர்ஸ் பரிசளித்தார்கள். அதிலிருந்த பாராட்டு மடலில் பின்வரும் செய்தி இருந்தது. “அனைத்திந்திய நட்சத்திரம் என்ற பெருமையை ஏற்கனவே பெற்றிருக்கிறீர்கள். பாக்ஸ் ஆபீஸில் உங்கள் பெயர் மேஜிக்தான். காஷ்மீரிலிருந்து குமரி வரை, பர்மாவிலிருந்து சிந்து வரையுள்ள மக்களை நீங்கள் மகிழ வைத்திருக்கிறீர்கள். உங்களின் ஒவ்வொரு படமும் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். திரையிடுபவர்களுக்கு லாபமும், பார்வையாளர்களுக்கு அவர்களது அன்றைய சிக்கல் மிகுந்த வாழ்க்கையிலிருந்து பறப்பது போன்றதொரு விடுதலையையும் உங்கள் படங்கள் தருகின்றன.”
இதற்கு நன்றி தெரிவித்துப்பேசிய சாந்தா ஆப்தே, “சினிமாத் துறையில் என் அனுபவங்கள் ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்கின்றன. நன்றாகப் படித்த, கலாச்சாரம் அறிந்தவர்கள் அதிகம் சினிமாவுக்குள் வர வேண்டும். சினிமாவுக்குள் இப்படிப்பட்ட ஆட்கள் வரும்போதுதான் அதற்கான மரியாதை மக்களிடம் கிடைக்கும். சினிமாவுக்குள் நுழைய தயங்குபவர்கள், அதில் குறைகள் கண்டு சொல்வது சரியல்ல. நடனம், இசை, நடிப்பு என்று இந்தத் துறைகளில் நுழைந்தால் மட்டுமே இந்தியக் கலைத் துறை புத்துணர்வு பெறும். நிறைய சிக்கல்கள் தாண்டித்தான் நாம் ஜெயிக்க வேண்டியிருக்கிறது.
படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், கூகுள்
இங்குள்ள என் தங்கைகளிடம் இதைத்தான் நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் திறமைகளை வெளிக்கொணர வெள்ளித்திரை தரும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். திட மனதுடன், உறுதியுடன் நாம் தொடர்ந்தால்தான் உலக அளவில் இந்திய கலைத்துறைக்கு மதிப்பு கூட்ட முடியும்” என்று பேசினார். அதன்பின் ‘வந்தே மாதரம்’ பாடலை எழுச்சியுடன் பாடினார். 1938ஆம் ஆண்டு இந்தியாவின் தலைசிறந்த நடிகை ஒருவர் நகரின் பெரிய திரையரங்கில் நின்று, வந்தே மாதரம் பாட எத்தனை உறுதி வேண்டும் என்று வியந்து போகிறேன். அடுத்து `டிரயம்ஃப் டுடோரியல் காலேஜு’க்குச் சென்ற சாந்தா, அங்கு கலைக்கு தனித் துறை இருப்பதைக் கண்டு பாராட்டினார். அதன் முதல்வர் ராஜகோபாலன் என்று தெரிகிறது. இங்கும் `வந்தே மாதரம்’ பாடிச் சென்றார்.
அதே நாள் இரவு 8 மணிக்கு சாந்தா ஆப்தே முதன்முறையாக அனைத்திந்திய வானொலி நிலையத்தில் 5 நிமிடங்கள் பேசியிருக்கிறார். இந்த 5 நிமிட நிகழ்ச்சிக்கு முன் வேறு எப்போதும் அவர் வானொலி நிகழ்ச்சிகளில் பேசியதில்லை என்று தெரிகிறது. அந்த உரையும் முக்கியமானது. தனக்குக் கிடைத்த 5 நிமிடங்களில் சொற்சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்.
“சினிமா நட்சத்திரத்தின் வாழ்க்கை எளிதாக இருப்பதாக மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாங்களோ தொடர்ந்து பயிற்சியில் இருக்கிறோம். ஸ்டூடியோக்களைத் தாண்டி எங்களால் வெளிவர முடிவதில்லை. மைசூர் மற்றும் மதராஸை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் மூன்று வார விடுப்பில்தான் வந்திருக்கிறேன். இங்குள்ள கலையைத் தெரிந்துகொண்டு போவதுதான் என் எண்ணம். சில ஆண்டுகளாக நான் இசை கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதை அறிவீர்கள்; இப்போது இந்திய நடனமும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
*படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், கூகுள்*
மைசூர் மற்றும் மதராஸ் மாகாணங்களின் இசையும் நடனமும் என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன. நான் கவனித்ததை என் நடனத்தில் இணைத்துக்கொள்ள முயல்வேன். இந்தியத் திரைத் துறை சற்றே முன்னேறி வருகிறது. ஆனால், இன்னும் அதிகம் வளர வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில் நடிகர் நடிகையருக்குக் கிடைக்கும் ஊதியம் மிகக்குறைவு. சில நேரங்களில் கூலித் தொழிலாளர்களுக்குக் கூட இவர்களை விட நல்ல ஊதியம் கிடைக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். சிறந்த திறமைசாலிகள் நடிக்க வர வேண்டும்; தயாரிப்பாளர்கள் திறமைக்கு வாய்ப்பளிக்க வேண்டும். சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள பெண் நடிக்க வரலாமா என்று என்னைக் கேட்பவர்கள் உண்டு. ஏன் முடியாது என்று கேட்கிறேன். நல்ல பெண் எங்கிருந்தாலும் தன் தன்மையை மாற்றிக்கொள்ளாமல் இருக்க முடியும். ஆனால், கதை கட்டிவிடுபவர்கள் இங்கு அதிகம்; அவர்கள் திருந்த வேண்டும். புரளிகள் பெரும்பாலும் பொறாமையால் ஏற்படுபவை. எந்தப் பெண்ணும் இதுபோன்ற புரளிகளிலிருந்தும் அவதூறுகளிலிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். அவளுக்குத் தயாரிப்பாளர்கள், படக் கம்பெனிகள் துணையிருக்க வேண்டும்.
*படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், கூகுள்*
இந்த விஷயத்தில் இப்போதைய தயாரிப்பாளர்கள் மிக மோசமாக இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஸ்டூடியோக்களில் இன்று போதிய வசதிகள் இல்லை. திரைத் துறையில் இருப்பவர்களுக்கு போதிய உடல், உள்ளப் பேணுதலுக்கான வசதியை ஸ்டூடியோக்கள் செய்துதர வேண்டும். இந்திய பட நிறுவனங்கள் கலைஞர்களுக்கு அவர்கள் பற்றிய செய்திகள் வரும் பத்திரிகைகள், நாளிதழ்களைக்கூட வாசிக்க வழங்குவதில்லை”.
5 நிமிடங்களில் எவ்வளவு சிந்தித்துப் பேசியிருக்கிறார். தனக்காக மட்டுமல்லாமல், தன்னுடன் இயங்கும் திரைத் துறையினர் அனைவருக்காகவும் ஒரு பெண் 80 ஆண்டுகளுக்கு முன் பேசியிருப்பது ஆச்சர்யம்தான். இன்றும் தங்களுக்கு துறைசார் அவலங்கள் இருப்பது குறித்தும், காஸ்டிங் கவுச் தொல்லைகள் பற்றியும், சமூக அக்கறையுடன் பேசும் நடிகைகளை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பது நாம் அறியாதது அல்ல. நடிகைகளுக்கு சமூகப் பொறுப்பும், அக்கறையும் இருக்கிறது என்பதைக்கூட ஒப்புக்கொள்ள முடியாத சமூகம் நாம். வெறும் காட்சிப் பொருளாக, மரங்களைச் சுற்றி டூயட் பாடும் பதுமைகளாகப் பார்த்த நமக்கு, சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் பேசும் நடிகைகள் கேலிப் பொருள்களாகவே தெரிகின்றனர்.
“முதல்வர் பதவியில் ஜெயலலிதாவை அமர்த்தி அழகு பார்த்த சமூகம் நாம்” என்று சொல்ல விழைகிறீர்கள் இல்லையா? எம்.ஜி.ஆர் என்ற ஆல்ஃபா-ஆணின் வாரிசாகப் பார்த்து தானே ஜெயலலிதாவை அந்தப் பதவியில் அமர்த்தினீர்கள்? பெண் அல்லது நடிகை என்று மட்டும் நீங்கள் பார்த்திருந்தால்… ஜெயலலிதா என்ற பிரமாண்டம் அந்த இடத்துக்கு வருவதற்கே எம்.ஜி.ஆர் என்ற ஆண் துருப்புச் சீட்டு தேவைப்பட்டது என்றால், மற்ற நடிகைகள் நிலை என்ன? இன்று படக்காட்சிகளுக்கு இடையே கேரவனில் சுகமாக அமர்ந்திருக்கும் நடிகைகள் எத்தனை பேருக்கு, நடிகைகளுக்கு படப்பிடிப்புத் தளங்களில் கழிவறைகள் வேண்டும், பிற வசதிகள் வேண்டும் என்று கேட்டுப் போராடிய சாந்தாவைத் தெரியும்?
1938 அக்டோபர் 29 அன்று ‘வில்லிங்டன்’ பங்களாவின் தோட்டத்தில் நகரின் முக்கிய திரையரங்குகளும், அமைப்புகளும் ஒருங்கிணைந்த கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து சாந்தாவுக்குப் பாராட்டு விழா ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இதற்குத் தலைமை வகித்தவர் அன்றைய கல்வித் துறை அமைச்சரான பி.சுப்பராயன். நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம், அமைச்சர் எஸ்.ராமநாதன் போன்றோர் பங்கேற்றனர். சாந்தாவைப் பாராட்டிப் பேசிய சுப்பிரமணியம், அவரது குரல் தனித்துவம் மிக்கது என்றார். இந்தியை எதிர்ப்பவர்கள்கூட, அவரது இந்திப் படங்கள் மற்றும் பாடல்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றவர், தமிழ்ப்படம் ஒன்றில் அவர் நடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். வெள்ளிப் பேழை ஒன்றை மதராஸ் மாநகராட்சி சார்பில் பேபி சரோஜா சாந்தாவிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் சாந்தாவைப் பாராட்டி பம்மல் சம்பந்தனாரும், அம்மு சுவாமினாதனும் பேசினார்கள்.
தென்னிந்திய திரைப்படத் துறையின் நிலையைத் தெரிந்துகொள்ள தன் தற்போதையப் பயணம் உதவியதாகவும், வட இந்தியாவைப் போல தென்னிந்திய திரைத் துறை இல்லை என்றும் பேசிய சாந்தா, சரியான திட்டமிடல், செயல்பாடு இருந்தால் அந்த நிலையை தென்னிந்தியா எட்டலாம் என்றும் பேசினார். இங்கு அப்போது பிரபலமாக இருந்த பரத நாட்டியத்தையும் தான் கற்க விரும்புவதாகத் தெரிவித்தார். அடுத்து பேசிய சுப்பராயன், தனக்கு சினிமா அறவே பிடிக்காது என்றும், பார்ப்பதே இல்லை என்றும் கூறினார்.
வேறுவழியின்றி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் காண்பதாலும், சினிமா பற்றிய ‘நல்ல கருத்து’ தனக்கு இல்லை என்று சொல்பவர், சாந்தா திரைப்படங்களில் நடிப்பதைக் கைவிட்டு, இசை மற்றும் நாடகத் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேசினார். இதைக் கேட்ட சாந்தா என்ன சொல்லியிருப்பார் என்று என்னால் ஊகிக்க முடிகிறது. அவர் சொல்ல நினைத்ததை சுப்பராயனிடம் சொல்லியிருந்தாலோ, பாபுராவ் படேலுக்கு நேர்ந்ததை யாரேனும் அவரிடம் சொல்லியிருந்தாலோ, அவர் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைக்கையில் சின்னச் சிரிப்பு தான் தோன்றுகிறது.
வெறும் பெயராக, ரவிவர்மாவின் ஓவிய மாடலாக மனக்கண்முன் தோன்றிய சாந்தா, இந்த மூன்று நாட்கள் விவரங்களைப் படித்து முடிக்கையில் சிம்மாசனம் போட்டு மனத்தில் உட்கார்ந்து கொண்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். 1941ஆம் ஆண்டு மதராஸுக்கு மீண்டும் வந்தார் சாந்தா – சாவித்திரியாக!
ஒய்.வி.ராவ் இயக்கத்தில் வெளிவந்த “சாவித்திரி” திரைப்படத்தில் சொந்தக்குரலில் தமிழ் பேசி, பாடி நடித்தார் சாந்தா. அதற்கு ஒருவருடக் காலம் தமிழ்மொழி கற்றிருக்கிறார். டி.சி.வடிவேலு நாயக்கர் என்ற திரை எழுத்தாளரிடமும், மயிலாப்பூரிலிருந்து பூனாவுக்குத் திருமணமாகிச் சென்ற பெண் ஒருவரிடமும் ஓர் ஆண்டு தமிழ் கற்றார் சாந்தா என்று எழுதுகிறார் ராண்டார் கை. அந்த பூனா பெண்மணியின் வீட்டுப் பின்வாசல் வழியே வேலைக்காரி போல வேடமிட்டு, தினமும் சாந்தா தமிழ் படிக்க வந்துசென்றதாகவும் எழுதுகிறார் ராண்டார்.
*படம்: இந்து தமிழ்*
இந்தப் படத்தில் நாரதராக நடித்த எம்.எஸ்ஸைவிட, மாளவி தேவியாக நடித்த பி.பானுமதியைவிட ‘ஆன் ஸ்கிரீன் பிரசன்ஸ்’ சாந்தாவுக்கே அதிகம். மூன்று இசையரசிகள் நடித்தது இந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு.
1950களில் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார் சாந்தா. இதன் காரணம் அவருடன் துணையாயிருந்த சகோதரர் அவரை விட்டு விலகியதாக இருக்கலாம்.
1939ஆம் ஆண்டு பிரபாத் படக் கம்பெனி அலுவலகத்தின் முன் உண்ணாவிரதமிருந்து, தனக்கு எதிராக இருந்த ஒப்பந்தத்தை நீக்கச் செய்தவர் சாந்தா. “ஜாவூ மி சினிமத்” என்ற தன் வாழ்க்கை வரலாற்றையும் எழுதிவைத்தார் சாந்தா. அண்ணன் விலகிய பிறகு பொருளாதாரப் பின்னடைவை சந்தித்த சாந்தா, மதுவை நாடினார். சாந்தா தன் 46ஆவது வயதில், 1964ஆம் ஆண்டு உடல்நலம் குன்றி இறந்து போனார். ஒரு சூப்பர் நட்சத்திரம் உதிர்ந்து போனது.
*படம்: கோபால கிருஷ்ணா திரைப்படம், நன்றி: பாலிவுட் டைரக்ட் *
மீண்டும் ஜெயதேவி மங்களகௌரியை நடு இரவில், நடுங்கும் விரல்களுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விளக்கின் ஒளி அந்த சாந்தமான முகத்தில் பட்டுத் தெறிக்கும்போது புரிகிறது. அந்த ஒளி விளக்கிலிருந்து வந்ததல்ல. சாந்தாவின் உள்ளிருந்தே வந்திருக்க வேண்டும். ஹல்தங்கரின் விளக்குப் பெண் ஓவியத்தை இனி பார்க்கும்போதெல்லாம் சாந்தா நினைவுக்கு வருவார். கூடவே சாட்டையைச் சொடுக்கியபடி பாபுராவின் அலுவலகத்தில் புலியெனப் பாய்ந்த பெண்ணின் பிம்பமும் நிழலாடும். சாந்தாவைத் தெரிந்துகொள்ள எனக்கு அக்டோபர் மாதத்தின் சென்னை சுற்றுப்பயணம் போதுமானதாக இருக்கிறது. நடிகையரை சராசரிப் பெண்களாகப் பார்க்கும் தெளிவு பிறந்திருக்கிறது. அவர்களுக்கும் சமூகத்தின்பால் அக்கறை உண்டு என்பது புரிகிறது. உங்களுக்கு?
*படம்: என்.எஃப்.ஏ.ஐ.*
(**கட்டுரையாளர்: நிவேதிதா லூயிஸ்**, சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர்.எதுவும் யாருக்கும் சொந்தம் இல்லை என்று நம்புபவர். அனைவரும் சரிநிகர் சமமே என்ற கோட்பாட்டைக் கொண்டவர். நாத்திகம் பேசினாலும், வழிபாட்டு தலங்கள், பொது இடங்கள் எல்லாவற்றின் வரலாறு மீதும் அளப்பரிய ஆர்வம் உண்டு. எங்கோ, என்றோ தன் எழுத்து ஒருவரை அமைதியாய் அமர்ந்து சிந்திக்கவைக்கும் என்றால், பண்படுத்தும் என்றால், சோர்வுறும் வேளையில் ஒரு துளி தேனாகும் என்றால், அதுவே தன் பெருவெற்றி என்கிறார். தற்போது ‘அவள் விகடன்’ இதழில் 14 நாள்கள், முதல் பெண்கள் என்ற இரண்டு பத்திகள் எழுதிவருகிறார். வரலாற்றில் பெண்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருகிறார்.)
�,”