bதயார் நிலையில் படைகள்: ராஜ்நாத் சிங்

Published On:

| By Balaji

சென்னையில் இன்று நடைபெற்ற, கடலோர ரோந்து கப்பலான ‘வராஹா’வை நாட்டிற்காக அர்பணிக்கும் விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சென்னை வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய கடலோர காவல்படையின் விழாவில் நேற்று(செப்டம்பர் 24) கலந்து கொண்டார். பின்னர், கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து ஏஜென்சிகள் மற்றும் பங்குதாரர்களை தொடர்புகொண்டு தேசிய பாதுகாப்பின் பொதுவான இலக்கை அடைவதில் ஈடுபட அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று(செப்டம்பர் 25) சென்னை துறைமுகத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐசிஜிஎஸ் வராஹா என்ற கடலோர ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ராஜ்நாத் சிங். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் கிருஷ்ணசாமி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “கர்நாடகாவில் மங்களூரு துறைமுகம் முதல் தமிழகத்தில் கன்னியாகுமரி வரையிலான கடற்பரப்பில் வராஹா கப்பல், ரோந்துப் பணியில் ஈடுபடும். கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், தீவிரவாத தடுப்பு, கடத்தல் தடுப்பு போன்ற சவால்களை வராஹா எதிர்கொள்ளும்.

விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான ‘வராஹா’-வை குறிக்கும் நோக்கில் ரோந்துக் கப்பலுக்கு வராஹா என்ற பெயரை வைத்துள்ளோம். வராஹா, அன்னை பூமியை பாதுகாக்க பன்றியின் வடிவத்தை எடுத்தது. அன்னை பூமியைக் காப்பாற்றும் கடமையில், தியாகம் மற்றும் மீட்பு என்ற கொள்கையை இது நமக்கு நினைவூட்டுகிறது. நமது பொருளாதார செழிப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு சுத்தமான பெருங்கடல்கள் முக்கியம்” எனக் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது, இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை, கையெறி குண்டுகளை பாகிஸ்தான் வீசி விட்டு செல்வதாக பஞ்சாப் முதல்வர் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எல்லை தாண்டிய பயங்கரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் சரி. அதனை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க நமது ராணுவ வீரர்கள் தயாராக இருக்கின்றனர் எனக் கூறினார்.

பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வந்த பாலகோட் பகுதியை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பாதுகாப்புப் படையினர் முழுமையாக தயாராக இருப்பதாகவும், எந்தவொரு அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கடற்படைக்காக உள்நாட்டிலேயே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, இலகு ரக தேஜஸ் போர் விமானத்தின் தரை இறக்கும் சோதனை இம்மாதம் செப்டம்பர் 13 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்திய கடலோர காவல்படைக்கு ஐசிஜிஎஸ் வராஹா என்னும் இந்த அதிநவீன ரோந்து கப்பல் ஒப்படைக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 26 நாட்டிகள் வேகத்தில் பயணிக்கக்கூடிய வராஹா, ஒரு முறை எரிபொருள் நிரப்பப்பட்டால் 9 ஆயிரத்து 260 கிலோ மீட்டர் வரையில் பயணிக்கும்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share