கடந்த சனிக்கிழமை அன்று சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகாருக்கு உள்ளான ஐஐடி பேராசிரியர்கள் 3 பேரிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலத் தரப்பினரும் ஐஐடி முன்பு போராடி வருகின்றனர். நேற்று காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பாத்திமா மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
முஸ்லீம் என்பதற்காக பேராசிரியர்கள் கொடுத்த மன உளைச்சலால் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் குற்றம்சாட்டும் நிலையில், அவரது தோழிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, இண்டர்னல் மதிப்பெண் குறித்து பேராசிரியர் சுதர்சன் பத்பநாபனுக்கு மெயில் அனுப்பியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் தரப்பில் 20 மதிப்பெண்களுக்கான தேர்வில் 18 மதிப்பெண்ணுக்கு பதிலாக தனது மகளுக்கு 13 மதிப்பெண்களே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாணவியின் விடைத்தாளை சரிபார்த்ததில் சரியான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து பாத்திமாவின் தோழிகளிடம் விசாரித்ததில் அவர்கள், தவறாக மெயில் அனுப்பிவிட்டேன் என்று பாத்திமா மன உளைச்சலில் இருந்தார் என்று தெரிவித்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் மாணவியின் மொபைல் சைபர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதன் அறிக்கை வந்த பிறகே பேராசிரியர்களுக்கு எதிராக வேறேதும் ஆதாரங்கள் உள்ளதா என்பது தெரியவரும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.�,