அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விதிகளை மீறி பண்டிகைக் காலங்களில் சலுகைகள் அறிவிப்பதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது.
பண்டிகைக் காலங்கள் என்றாலே கூட்ட நெரிசலில், மக்களோடு மக்களாக கடை வீதிகளில் சென்று பொருட்கள் வாங்கும் பழக்கத்தை ஆன்லைன் நிறுவனங்கள் ‘ஆப்’ மூலம், கடை வீதிகளை நம் கைகளுக்குள் கொண்டு வந்து அப்பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. கவர்ச்சிகரமான விளம்பரங்கள், 40 சதவீத ஆஃபர், 50 சதவீத ஆஃபர் என உடனடியாக வாங்கத் தூண்டும் சலுகைகளை ஆன்லைன் நிறுவனங்கள் அள்ளி வீசுகின்றன. அண்மைப் பொருளாதாரம் ஆன்-லைன் வர்த்தகர்களால் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது.
பெரிய ஆன்லைன் நிறுவனங்களின் தள்ளுபடியைத் தடுப்பதன் மூலம், சிறிய அளவிலான சில்லறை விற்பனையாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. அதில், இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் வணிக கட்டமைப்புகளை விதிகளுக்கு உட்பட்டு மாற்றியமைக்க அரசு கூறியிருந்தது. அமெரிக்காவின் வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மீது இந்திய அரசு விதித்துள்ள கட்டுபாட்டுக்கு அமெரிக்கா தரப்பிலிருந்து அப்போது விமர்சனங்களும் எழுந்தது.
இந்நிலையில், இருவாரங்களுக்கு முன் நடைபெற்ற பண்டிகை தின விற்பனையில், அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் விதிகளுக்கு மாறாக தள்ளுபடிகளை அறிவித்து இருப்பதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு திங்களன்று(அக்டோபர் 14)மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் அரசின் விதிகளுக்கு இணங்குவதாகக் கூறினாலும், பண்டிகை கால விற்பனையின் போது இவ்விரு நிறுவனங்களும் சில சந்தர்ப்பங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக தள்ளுபடி வழங்குவதாகவும் விதிகளை மீறுவதாகவும் இந்த புகாரில் இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றன.
இது குறித்து நேற்று(அக்டோபர் 15) மத்திய வர்த்தக அமைச்சகம் கூறும்போது, “அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டு விதிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி, சில்லறை விற்பனையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) தாக்கல் செய்த புகார்கள் மற்றும் ஆதாரங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது” என்று தெரிவித்திருக்கிறது.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் இது குறித்து கூறும்போது, நம்பமுடியாத தள்ளுபடிகள் காரணமாக வாடிக்கையாளர்கள் ஆன்லைனை நாடிச் செல்கின்றனர். இதனால் நேரடி வணிகங்களில் ஈடுபடுவோரின் விற்பனை மட்டும் நாடுமுழுவதும் இந்த மாதத்தில் 30 முதல் 40 சதவீதமாக குறைந்துள்ளது”எனக் குற்றம் சாட்டினார்.
கடந்த பண்டிகை தின விற்பனையில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் விதிகளைப் பின்பற்றி சலுகைகளை அறிவித்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
�,”