புல்வாமா தாக்குதல்: வெடிகுண்டுக்கு உதவிய அமேசான் பொருட்கள்!

public

புல்வாமா தாக்குதல் நடைபெற்று ஒரு வருடம் முடிந்துவிட்டது. அத்தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பான்மையான தீவிரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் வேட்டையாடி கொன்றுவிட்டாலும், இந்தியாவுக்குள் இருந்து அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்ற தேடுதல் வேட்டையைத் தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) கைவிடவில்லை. புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் இந்திய எல்லைக்குள் கொண்டுவரப்பட்டது எப்படி, அதை எங்கு தயார் செய்து, எப்படி புல்வாமா தாக்குதலை நடத்தினார்கள் என்பது குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தினாலும், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் விசாரணை தேங்கியிருந்தது. அப்போதுதான் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டின் ஒரு பாகம் அமேசான் தளத்தில் வாங்கப்பட்டது என்ற தகவல் தெரியவந்திருக்கிறது.

சிதறிய வெடிகுண்டின் பாகங்களைச் சோதனை செய்த தடயவியல் துறையினர், ஒரு பாகத்தின் பதிவு எண்ணைக் கைப்பற்றி தேசியப் புலனாய்வு அமைப்புக்குக் கொடுத்தனர். அந்த எண் பதிவு செய்யப்பட்ட பொருள் யாருக்கு விற்கப்பட்டது என்ற தகவலை அமேசான் நிறுவனத்திடம் கேட்டபோது, அதை ஸ்ரீநகரில் வசிக்கும் வைஸ் உக் இஸ்லாம் என்ற 19 வயது இளைஞர் வாங்கியிருக்கிறார் என்று அமேசான் நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது. மேலும், அவர் அமேசான் மூலம் என்னென்ன பொருட்களை வாங்கியிருக்கிறார் என்று விசாரித்தபோது அம்மோனியம் பவுடர், பேட்டரிக்கள் மற்றும் சில உடைகளை அமேசானில் வாங்கியிருக்கும் தகவல்களையும் கொடுத்திருக்கின்றனர். இவற்றை அடிப்படையாக வைத்து வைஸ் உல் இஸ்லாமை மார்ச் 6ஆம் தேதி கைது செய்திருக்கிறது தேசியப் புலனாய்வு அமைப்பு. 19 வயது இஸ்லாமிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் ஜைஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதிகளின் அறிவுறுத்தலின்படி இந்தப் பொருட்களை அமேசான் தளத்தில் வாங்கி அவற்றை தன் வீட்டுக்கே வரவழைத்து, தீவிரவாதிகளிடம் நேரடியாக அவரே கொடுத்திருப்பதை ஒப்புக்கொண்டார். விசாரணையின் அடுத்தகட்டமாக, தீவிரவாதிகள் தங்கியிருந்த இடம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், புல்வாமாவில் வசிக்கும் முகமது அப்பாஸ் ரத்தர் என்பவரின் வீட்டில் தீவிரவாதிகள் தங்கியிருந்ததை இஸ்லாம் கூறியிருக்கிறார். இதனடிப்படையில், அப்பாஸ் ரத்தர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார். அப்போதுதான், புல்வாமா தாக்குதலில் மனித வெடிகுண்டாகச் செயற்பட்டு 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைவதற்குக் காரணமாக இருந்த அடில் அகமது தர் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் அப்பாஸ் ரத்தரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது.

ரத்தர் பல வருடங்களாக ஜைஷ்-இ-முகமது அமைப்பின் களச் செயற்பாட்டாளராக இருந்திருக்கிறார். கடந்த 2018ஆம் வருடம் தான் புல்வாமாவில் வசித்துவருவதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கடந்த வாரம் தான் புல்வாமா தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக புல்வாமாவைச் சேர்ந்த அப்பா – மகள் ஆகிய இருவரை கைது செய்திருந்தது தேசியப் புலனாய்வு அமைப்பு. இந்த நிலையில் அடுத்ததாக வைஸ் உல் இஸ்லாம் மற்றும் அப்பாஸ் ரத்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மனித வெடிகுண்டாகச் செயற்பட்ட அடில் அகமது தர் பேசக்கூடிய வீடியோ ஒன்றினை, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வெளியிட்டது ஜைஷ்-இ-முகமது அமைப்பு. அந்த வீடியோ எடுக்கப்பட்டது ரத்தர் வீட்டில்தான் எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வைஸ் உல் இஸ்லாம் மற்றும் ரத்தர் ஆகிய இருவரது கைதுடன் சேர்த்து, புல்வாமா தாக்குதலுக்கு உதவியவர்களின் கைது ஐந்தாக உயர்ந்திருக்கிறது. இந்த விசாரணையில் முதலாவதாக கைது செய்யப்பட்டவர் புல்வாமாவின் கக்கபோரா பகுதியில் ஃபர்னிச்சர் கடை வைத்திருந்த ஷகிர் பஷிர் மாக்ரே என்பது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்றது குறித்து அமேசான் தரப்பில் “இந்திய நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டுதான் அமேசான் பொருட்களை விற்பனை செய்துவருகிறது. ஒரு வர்த்தக நிறுவனமாக எங்களுடைய பயனாளர்களுக்கு விற்கப்படும் பொருட்கள் பாதுகாப்பானதா என்பதையும் சட்டத்துக்குட்பட்டே விற்று வருகிறோம். இந்த வழக்கின் இப்போதைய நிலை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. விசாரணைக்குத் தேவையான அத்தனை ஒத்துழைப்பையும் எங்கள் தரப்பிலிருந்து தவறாமல் கொடுப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-சிவா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *