pகிச்சன் கீர்த்தனா: சாக்லேட் கேக் (எக்லெஸ்)

Published On:

| By Balaji

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் சாக்லேட்டையும் ஒரு மூலப்பொருளாகக்கொண்டு, சாக்லேட் ஃப்ளேவர் கேக்குகள், பிஸ்கட்டுகள் தயாரிக்கத் தொடங்கினார்கள். இவை அதிவேகமாகப் பரவியது அமெரிக்காவில்தான். 1980-களில் அமெரிக்கர்கள் ‘Chocolate Decadence’ கேக்குகளுக்கு அடிமையாகவே இருந்தார்கள். முழுக்க முழுக்க சாக்லேட்டாலான இந்த கேக்குக்கு Devil’s Food என்ற பெயரும் உண்டு. காரணம், அதிக கலோரியுடன் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவு இது. 1990-களில் டிரெண்ட் மாறியது. ‘Molten Chocolate Cakes’ பிரபலமானது. அதாவது கேக்கின் நடுவில் சாக்லேட் திரவம்போல இருக்கும். இன்றைக்கு சாக்லேட் கேக்கிலேயே எண்ணற்ற வகைகள் மக்கள் மனத்தை ஆட்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று முட்டையில்லாத சாக்லேட் கேக்.

**என்ன தேவை?**

மைதா – ஒன்றரை கப்

கோகோ பவுடர் – கால் கப்

ரிஃபைண்ட் எண்ணெய் – கால் கப் + 2 டேபிள்ஸ்பூன்

பால் – அரை கப்

தயிர் – அரை கப்

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்

சர்க்கரை – ஒரு கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

**செய்முறை**

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றைக் கலந்து கட்டியில்லாமல் இரண்டு முறை சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், தயிர், சர்க்கரை மூன்றையும் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக அடிக்கவும். பின்னர் அதில் பேக்கிங் சோடாவைக் கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு அதில் வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். பின்னர் சலித்துவைத்துள்ள மாவுக் கலவையை அதில் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். பிறகு அதில் கால் கப் எண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

ஒரு பேக்கிங் பானில் எண்ணெய் தடவி அதில் பேக்கிங் பேப்பரை வைக்கவும். பேப்பரின் மேல் சிறிது எண்ணெய் தடவி கலந்துவைத்துள்ள கேக் மாவை அதில் ஊற்றி லேசாகச் சமப்படுத்தவும். பின்னர் இதை ஓவனில் வைத்து 20 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். விருப்பப்பட்டால் சாக்லேட் கனாஸ் (Ganache) செய்து அதை கேக் மேல் ஊற்றிப் பரிமாறலாம்.

**[நேற்றைய ரெசிப்பி: ஆரஞ்சு க்ரான்பெர்ரி கேக்](https://minnambalam.com/public/2021/12/16/1/orange-cake)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share