~பக்தர்கள் வெள்ளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

Published On:

| By admin

திருவிழாக்களின் திருவிழா என்று அழைக்கப்படும் மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மதுரை என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சியும் கள்ளழகரும் தான். மீனாட்சி அம்மன் கோயில் தேர் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ஆகியவை ஒருங்கிணைந்த விழாவாக ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவாக நடத்தப்படும்.

கடந்த இரு ஆண்டுகாலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இவ்விழா பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று குறைந்து திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி இந்தாண்டு மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மக்கள் வெள்ளத்துக்கு நடுவே நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ச்சியாக வீதியுலா நடைபெற்று, ஏப்ரல் 12ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15), தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேர் அடிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக ஒரே வாகனத்தில் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்துவரப்பட்டனர்.

அங்கு அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினார். பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும் பிரியாவிடையும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினார்கள்.

அங்குள்ள கருப்பண்ணசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது. முதலில் பெரிய தேர் புறப்பட அதைத் தொடர்ந்து சிறிய தேரும் புறப்பட்டது.
தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானைகள் சென்றன. அவற்றைத் தொடர்ந்து விநாயகரும், முருகனும், நாயன்மார்கள் அமர்ந்திருந்த சப்பரங்களும் சென்றன.

மதுரை நகர வீதிகளான கீழமாசி, தெற்கு மாசி, மேலமாசி வடக்கு மாசி வீதிகளில் சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் தேர் ஆடி அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் வந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வணங்கினர். உயரமான கட்டிடங்களில் நின்றும் பக்தர்கள் தேரோட்டத்தைக் கண்டு களித்தனர்.

தேர்த் திருவிழாவை முன்னிட்டு வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்துள்ளதால் தென் மாவட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று தேரோட்டம் நடைபெற்றதை தொடர்ந்து நாளை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக அழகர்கோயில் மலையிலிருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். நாளை காலை 5.50 மணியில் இருந்து 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share