இந்தக் கட்டுரையின் தலைப்பான “ஸ்ஸிங் ஸூயி” என்னும் சீன மொழிச் சொல்லை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் வரும் பொருள் “அட்டென்ஷன் ப்ளீஸ்”.
தமிழில், “கனிவான கவனத்துக்கு”.
யாருடைய கவனத்துக்கு? அப்படியென்ன அவசரம்? அதை ஏன் சீன மொழியில் சொல்லிக் காட்ட வேண்டும்? இப்படியாகத் தோன்றும் எல்லா கேள்விகளுக்கும் காரணம் இருக்கிறது.
தென்கிழக்கு ஐரோப்பாவில், மலைகள் சூழ்ந்த மாஸிடோனிய நாட்டில் விசித்திரமானதொரு பழக்கம் உண்டு.
அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு, குழந்தையின் தாயோ – தந்தையோ அல்லது மத குருமார்களோ பெயர் சூட்டுவதில்லை. மாறாக, குழந்தை பிறந்ததும் பிரசவத்துக்குத் துணை செய்த தாதியாகப்பட்டவள் தெருவில் இறங்கி ஓட ஆரம்பிப்பாள்.
தன் கண்ணில் படும் முதல் வழிப்போக்கரை வணங்கி. “ஐயா, தங்கள் பயணம் இனிதாகட்டும், எங்கள் வீட்டில் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. அந்த அழகான குழந்தைக்கு நல்லதொரு பெயரை சொல்வீர்களா…” என்று படபடத்தபடி முகம் பார்த்துக் கேட்பாள்.
வழிப்போக்கரும் விண்ணைப் பார்த்து, “ஃபாலா போகு” , “ஃபாலா போகு” (கடவுளுக்கு நன்றி, கடவுளுக்கு நன்றி) என்று உச்சரித்தபடியே தன் மனதில் தோன்றியதொரு பெயரை சொல்வார். அன்று முதல், அதுவே அந்தக் குழந்தைக்கு பெயராக வழங்கப்படும்.
அப்படித்தான், 1911ஆம் ஆண்டு ஜனவரியின் இறுதி நாளில் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு “வங்கேலியா பாண்டெவா டிமிட்றோவா” என்று நாமகரணம் செய்யப்பட்டது.
சென்ற நூற்றாண்டின் இறுதி வரை வாழ்ந்த அந்தப் பெண்மணி, எதிர்காலத்தைக் கணித்து சொல்லும் மாபெரும் “தீர்க்கதரிசியாக” விளங்கினார். மக்கள் அவரை சுருக்கமாக “பாபா வான்கா” என்று வியந்து, போற்றி அழைத்தார்கள்.
பாபா வான்கா ஒரு பிறவிக் குருடர். ஆனாலும், அவரது “எதிர்காலக் கணிப்புகள்” மிகப் பிரசித்திமானவை.
2001ஆம் ஆண்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பை 1989ஆம் ஆண்டே சொல்லி விட்டவர் பாபா வான்கா. சிரியா போரைப் பற்றியும், சுனாமியைப் பற்றியும், விளாடிமீர் புட்டினைப் பற்றியும் கூட முன்கூட்டியே கணித்து சொல்லி ஆச்சர்யப்படுத்தியவர்.
“அமெரிக்காவின் 44ஆவது அதிபராக ஓர் ஆப்பிரிக்க – அமெரிக்கர்தான் வருவார்” என்று அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவியேற்பதற்கு 13 வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டவர் பாபா வான்கா.
தனது தீர்க்கதரிசன வெளிப்பாடுகளினால் எல்லோரையும் அசர அடித்துக் கொண்டிருந்த பாபா வான்கா, கடந்த 1996ஆம் ஆண்டு மறைந்து போனார்.
மறைவதற்கு முன்பு, அவர் சொல்லிச் சென்ற அதிர்ச்சிக்குரிய செய்திகள் பல. 2130இல் பூமிவாழ் மனித சமூகம், வேற்றுக் கிரக வாசிகளின் துணையோடு கடலுக்கடியில் வாழக் கற்றுக்கொள்ளும். 3797ஆம் ஆண்டில், மனித சமூகம் புதிய கிரகத்தில் காலனி அமைக்கும். இப்படி இன்னும் பல தீர்க்கதரிசன வெளிப்பாடுகளை சொல்லிப் போயிருந்தாலும், அவரிடமிருந்து கடைசியாக வெளிப்பட்ட கணிப்பு ஒன்று இந்தியாவை, தமிழகத்தை நேரடியாக பாதித்துவிடக் கூடும் என்னும் அச்சத்தின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.
**அப்படியென்ன சொன்னார் வான்கா?**
“2018இல்… அமெரிக்காவின் பொருளாதாரத்தைச் சீனா பின்னுக்கு தள்ளப் போகிறது. மட்டுமல்ல, சீனா உலக வல்லரசாகப் போகிறது.”
அதாவது , இன்னும் பத்தே ஆண்டுகளில் சீனா உலக வல்லரசாகி விடுமாம். வான்கா சொல்வதெல்லாம் “டூமீல்” என்று தள்ளி விடலாம்தான். ஆனால், சர்வதேச நாணய நிதியமும் அதையே சொல்லும் போதுதான் நமக்கு தயக்கமும், ஆச்சர்யமும் மேலிட்டு விடுகிறது.
ஆம், உலகப் பொருளாதாரச் சூழல், இப்படியே தொடருமானால், கூடிய விரைவில் சீனா வல்லரசாவது உறுதி என்கிறது சர்வதேச நிதி ஆணைய ரிப்போர்ட் ஒன்று.
அதற்குக் கட்டியம் கூறுவதுபோல ஹாலிவுட் சினிமாக்களில் சீனாவின் தாக்கம் சகல விதங்களிலும் அதிகமாகிக்கொண்டே வருவதைக் காண முடிகிறது.
சரி, வல்லரசாகித் தொலையட்டும். அதனால் நமக்கென்ன பிரச்னை?
பாபா வான்காவின் கூற்றுப்படி, சீனா உலக வல்லரசாக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? முதலில், தன் “பிரதேச வல்லாதிகத்தை” நிலை நாட்டியாக வேண்டும். அதாவது, ஆசியாவை தன் கைக்குள் கொண்டு வர வேண்டும்.
அதன் பிறகுதான் அது உலக அரசியலை நோக்கிப் பயணிக்க முடியும். ஆனால், இன்று வரை அது நடக்கவில்லை. ஆசியாவின் “பெரியண்ணனாக” சீனாவால் ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை.
காரணம் என்ன? பிரதேச வல்லாதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு சீனாவின் பாதையில் தடையாக நிற்பது எது?
இந்தியா!
ஆசியப் பிரதேசத்தில் சீனாவின் வேகத்தை மட்டுப்படுத்தவல்ல ஒரே நாடு இந்தியா.
சீனாவின் உலக வல்லரசுக் கனவை முடக்கி வைப்பதற்காகத் தான் அமெரிக்கா – ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளும் இந்தியாவை உலகளவில் மறைமுகமாக ப்ரமோட் செய்து சீனாவை பின் தள்ளியபடியே இருக்கின்றன என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.
ஆக, சீனாவின் உலக வல்லரசுக் கனவுக்கு உடனடித் தடையாக இருக்கும் இந்தியாவை, பதிலுக்குத் தொந்தரவு செய்ய தன்னால் முடிந்த அளவு சீனாவும் முயலும் என்பது எளிதான அரசியல் கணக்கு.
பொருளாதாரத்தில் இந்தியாவை விட ஆறு மடங்கு வளர்ச்சி பெற்ற நாடாக சீனா இருந்தாலும், இந்தியாவைப் பார்த்து சீனா தயங்குவதற்கு ஒரே காரணம், இந்தியாவில் காணப்படும் வேற்றுமையில் ஒற்றுமை.
பன்முகத் தன்மை கொண்டதொரு நாட்டில் எல்லோரும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றாகவே பிணைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு உலகமே அதிசயிக்கிறது. ஆனால், சீனா ஆயாசப்படுகிறது. அந்த நாடு புனிதக் கடவுளாகக் கொண்டாடும் புத்தர் பெருமான் பிறந்த தேசத்தின் மேல் அதற்கு ஒரு கண் இருப்பதை மறுக்க முடியாது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் தமிழகத்தில், தேச ஒற்றுமைக்கு எதிரானதொரு கருத்தாக்கத்துக்குள் மக்களின் மனநிலை தள்ளப்படுமேயானால், சீனா அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது.
மேலும், மேலும் அதை ஊதி வளர்த்து, தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் கூட தயங்காது.
உலகமே கண்டு அதிசயிக்கும், இந்தியாவின் “வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் அந்தப் பெருமைக்கு வேட்டு வைத்துவிட முடிந்தால், இந்தியாவின் ஜி.டி.பியை எளிதில் குலைத்து விடலாம் என்று சீனா கணக்கு போடலாம். அதன் மூலமாக இந்தியாவின் வேகத்தைக் குறைத்து, மெல்ல மெல்ல தனது வல்லாதிக்கக் கனவின் வண்ணங்களைக் கூட்டலாம் என்று நெற்றி மேட்டைத் தட்டி யோசிக்கலாம்.
அதற்கு நுழைவாயிலாக தமிழ்நாடு வாய்த்து விட்டால் “இரண்டு அல்ல மூன்று லட்டுகள் தின்னலாமே” என்றும் பரபரக்கலாம்.
காரணம். ஐ.டி துறையில் இந்தியாவின் அறிவுக்கிடங்காக விளங்குவது தமிழ்நாடு. மூன்று துறைமுகங்கள் இங்கு இருக்கின்றன. கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் என இரண்டு அணுமின் நிலையங்களும் இங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாத் துறையிலும், ஜவுளித் துறையிலும் முன்ணனியில் நிற்கிறது. நேரடி அந்நிய முதலீட்டில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஒன்பதில் ஒரு பங்கு தொழிலதிபர்கள் இங்கு தான் இருக்கிறார்கள்.
போதும், இது போதும் பிரிந்து போவதற்கு, “கமான் க்விக்” என்று சீன மூளைகள் துர்போதனை செய்ய ஆரம்பிக்கலாம்.
தண்ணீர் போன்ற விஷயங்களில் தமிழ்நாடு தன்னிறைவு அடைந்து விடவில்லை என்றாலும், அதனை சரிசெய்து கொண்டு விட முடியும். இப்போது தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை அப்போது வேறு வகையில் சந்திக்க முடியும்.
ஆம்… தமிழ்நாடு, தனி நாடு என்றாகி விட்டால், கர்நாடகம் என்பது தமிழ்நாட்டுக்கு அண்டை நாடு என்றாகி விடும். அப்போது, தண்ணீர் தந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அது உலகப் பிரச்னை ஆகிவிடும்.
சீனாவுக்கோ – பாகிஸ்தானுக்கோ தண்ணீர் தர முடியாது என்றால் என்னவாகும்? அதுபோல் கர்நாடகத்தையும், அல்ல அல்ல இந்தியாவையும் சரிக்கட்டிவிட முடியும். இதுபோல, மேலும் ஏதேதோ சொல்லிக் கொடுத்து உள்ளே புக சீனா அவசரப்படக் கூடும்.
தமிழகத்தின் இன்றைய நிலைமையோ மிக மோசம். எங்கு பார்த்தாலும் சலிப்பும், விரக்தியுமாக அல்லாடும் மக்கள். திரும்பும் திசையெல்லாம் ஏமாற்றம். காணும் கண்களை அவமானப்படுத்தும் அளவுக்கு கேவலமாக வெளிப்படும் ஆள்வோரின் அப்பட்டமான பதவி வெறி சல்லாபம். மத்தியும் மாநிலமும் சேர்ந்து, மக்களைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலையே படாமல் ஆடிக்கொண்டிருக்கும் அரசியல் தப்பாட்டங்கள்.
அனைத்தையும் கவனித்துக் கொண்டேயிருக்கும் தமிழக இளைஞர்களின் கோபம், “பல்லி வேட்டை” யைப் போல உள்ளுக்குள் மூளும் வேகத்தை எல்லாம் ஆழ அடக்கி வைத்தபடி மௌனித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அதைச் சீனத்துப் புளித்த கண்கள் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.
கவனியுங்கள். ஒவ்வொரு வருடமும் 3,000 மாணவர்கள் மருத்துவம் பயில இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் செல்கிறார்கள், அதில், பத்து சதவிகிதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அதாவது. 300 பேர் தமிழர்கள்.
அங்கே, சீனாவில் தமிழ் மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில், மிக அருமையான கல்வி கொடுக்கப்படுகிறது. சீனாவின் மேல் அவர்களுக்கு தானாகவே ஒரு நல்லெண்ணம் பிறந்து விடுமளவுக்கு, நல்ல கவனிப்பும் அளிக்கப்படுகிறது. தமிழ் இளைஞர்களுக்கு உண்டாகும் அந்த “நல்லெண்ணத்தை” மேலும் பரவலாக்கி விளம்பரப்படுத்த சீனா வேகமாக செயல் படத் துவங்கும்.
அதுபோலவே, இன்று உலகமெங்கும் விரிந்து பரந்து 29 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். யூதர்கள் எங்கிருந்தாலும் தங்கள் பெருமைக்குரிய தாயகமாக இஸ்ரேலைக் கருதுவதுச் போல, உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள், தன்மானத்தோடு வாழ தங்களுக்கொரு தாயகமாக தமிழகம் அமையட்டும் என விரும்பக் கூடும். சீனா, அந்தக் கருத்தை உலகமெங்கும் முடுக்கி விடக் கூடும்.
தமிழர்கள் முன்பு போலில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய தன்மைகொண்ட தமிழ் இளைஞர்கள் இப்போது கல்வி, கேள்விகளிலும் முன்னேறி நிற்கின்றார்கள்.
அவர்களுக்குண்டான நியாயங்கள் தொடர்ந்து மறுக்கப் படுமேயானால் அவர்களுக்கு போக்கிடம்தான் என்ன?
தமிழர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக எண்ணி மனம் குமைய ஆரம்பித்து விட்டால் அந்த குமைச்சலுக்கு மருந்தென்ன?
தங்களை நட்புணர்வோடு அரவணைக்காமல், ஆதிக்க மனப்பான்மையோடு அடக்கி ஆள எண்ணுகிறார்கள் என்னும் எண்ணம் மக்களிடையே வலுப்பட்டுக்கொண்டே போகுமானால் அதற்கு பரிகாரம்தான் என்ன?
அதனை எண்ணிப் பார்க்கவே மனம் அஞ்சுகிறது. மனம் சஞ்சலப்பட்டாலும், அதற்கன சாத்தியக் கூற்றை மறுத்து விட முடியாது.
ஆம், உலக வல்லரசாக முயலும் சீனாவின் ட்ராகன் சற்றே சிலிர்த்துக் கொண்டு இந்தியப் பெருங்கடல் வழியாக ஏறக்குறைய நாலாயிரத்து ஐநூறு நாட்டிக்கல் மைல் தூரம் தெற்கு நோக்கி சரேலென செங்குத்தாகப் பாய்ந்து வந்து இறங்கி, தன் தலையை சற்றே வலபுறம் திருப்பி, அரசியல் ஆதூரத்தோடு தமிழ்நாட்டை நோக்கும் நிலை தோன்றி விடக் கூடும். வான்காவின் தீர்க்க தரிசன வெளிப்பாடு மெய்யாகி விடக் கூடும்.
ஆம், சீனாவின் ட்ராகன் தமிழ் மண்ணில் தரையிறங்கி விடக் கூடும்!
தொடரும்…
கட்டுரையாளர் குறிப்பு:
ஸ்ரீராம் சர்மா…
திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.
�,”