மே மாதத்தில் ரஷ்ய நகரான மாஸ்கோவில் இருந்து பெய்ஜிங்கின் எண்ணெய் இறக்குமதி 55 சதவீதம் உயர்ந்து, உக்ரைன் போர் மீதான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக மாறியது சீனா. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கச்சா எண்ணெய்க்கான ரஷ்யாவின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, கடந்த மே மாதம் மட்டும் ரஷ்யாவில் இருந்து சுமார் 8.42 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்தது. மேலும் உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவை கண்டிக்காமல் சீனா இருந்து வருகிறது.
இதுகுறித்து சீனாவின் சுங்க பொது நிர்வாகம் வெளியிட்டுள்ள தரவின் படி, “கடந்த ஆண்டு மே மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகளை ஒப்பிடுகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த வருட மே மாதத்தில் 55 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் மட்டும் ரஷ்யாவில் இருந்து சுமார் 8.42 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்தது சீனா. அதே மாதத்தில் சவுதி அரேபியாவிலிருந்து 7.82 மில்லியன் டன் எண்ணெய் இறக்குமதி செய்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையை அதிகரிக்க போவதாக கூறிய சீனா, தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் படி, பெட்ரோல் விலை டன்னுக்கு 750 யுவான் (118.28 அமெரிக்க டாலர்கள்) உயர்த்தப்படும் என்றும், டீசல் விலை 720 யுவான் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.