மதுரையில் 31நாளே ஆன பெண் குழந்தை எருக்கம்பால் கொடுத்துப் பெற்றோர்களால் கொல்லப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
தமிழகத்தில் பெண் சிசுக் கொலையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த தொட்டில் குழந்தை திட்டம் , பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,
இதன் விளைவாகத் தமிழகத்தில் பாலின விகிதம் மாறுபட்டது. கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”இந்திய அளவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற விகிதாச்சாரம் நிலவுகிறது. அதேவேளையில், தமிழகத்தை எடுத்துக் கொண்டால், 1000 ஆண் குழந்தைகளுக்கு 943 பெண்குழந்தைகள் என்ற நிலை இருக்கிறது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு மாறாக மதுரை மாவட்ட உசிலம்பட்டியில் 31 நாளே ஆன பெண் குழந்தையை குழந்தையின் பெற்றோரே எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததும் நடந்துள்ளது. உசிலம்பட்டி அருகே பள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுருகன் (37), இவரது மனைவி சவுமியா. இவர்கள் தங்களது வீட்டு வாசல் முன்பே பழக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது,
**குடும்பமே குழந்தையை கொன்ற கொடூரம்**
தினசரி கூலி வேலையும் செய்து வரும் இவர்கள் தங்களுக்கு வேலைக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய ஒரு ஆண் மகன் வேண்டும் என்ற எண்ண ஒட்டத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் சவுமியா இரண்டாவது முறையாகக் கர்ப்பமாகியிருக்கிறார். கடந்த ஜனவரி 31ஆம் தேதி அழகான பெண் குழந்தைப் பிறந்துள்ளது.
ஆண் குழந்தையை எதிர்பார்த்த இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது ஏமாற்றமாக இருந்துள்ளது. இதனால் சிசுவைக் கொல்லத் திட்டமிட்டு, குழந்தையின் தந்தை எருக்கம்பால் எடுத்து வந்து கொடுத்திருக்கிறார். அதனை தாய் சவுமியா குழந்தைக்கு ஊட்டியுள்ளார்.
இதனால் குழந்தை இறந்துள்ளது. குழந்தை இறந்ததை யாருக்கும் தெரிவிக்காமல் தந்தையும், தாத்தாவும் வீட்டில் அருகே இருந்த மரத்தின் அடியில் புதைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் குழந்தை எங்கே என்று கேட்டதற்கு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டதாகவும் பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தகவலறிந்து நேற்று குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெற்றோர் வைரமுருகன், சவுமியா, தாத்தா சிங்கத்தேவன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் எருக்கம்பால் கொடுத்துக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து மூவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா இதுகுறித்து கூறுகையில், ”அந்த கிராமத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத ஒருவரிடம் இருந்து குழந்தை திடீரென இறந்துவிட்டதாக ஒரு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் அக்குழந்தை வீட்டுக்கு விசாரணைக்காகச் சென்றோம்.அப்போது வீட்டில் யாரும் இல்லை, இதனால் சந்தேகம் வலுத்த நிலையில் குடும்பத்தினரை போலீசார் தேடிக் கண்டுபிடித்தனர். அவர்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்” என்றார்.
மேலும் அவர், ”தொண்ணூறுகளில் உசிலம்பட்டியில் பெண் சிசிக்கொலை அதிகமாக இருந்து வந்தது. இதுபோன்ற சிசு கொலைகளைத் தடுக்க தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறாமல் குழந்தையைக் கொன்றது வருத்தமளிக்கிறது.
கடந்த நவம்பரிலும் உசிலம்பட்டியில் 15நாளே ஆன பெண் குழந்தை ஒன்று அவரது பெற்றோர்களால் கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்தது. இவர்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததும், உடனடியாக அக்குழந்தையை அடக்கம் செய்துள்ளனர். உள்ளூர் போலீஸுக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை, இந்த வழக்கின் பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். இந்த பெற்றோருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது” என்றார்.
**பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும்**
நாளை மறுநாள் பெண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது தமிழக மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் சிசுக்கொலை தலைதூக்க தொடங்குகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ”கண்டனத்திற்குரிய இதுபோன்ற செயலில் ஈடுபட்டோர், துணை நின்றோர் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, உசிலம்பட்டி அருகே பெண் சிசுக் கொலை எனத் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாத்திட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
**கவிபிரியா**
�,”