மோடி கூறிய பிறந்தநாள் வாழ்த்து செய்தியை ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடந்த 5ஆம் தேதியிலிருந்து நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தனது 75ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 16ஆம் தேதியையும் சிறையில்தான் கழித்தார். சிதம்பரம் சிறையில் இருந்தாலும், ட்விட்டரில் தனது கருத்துகளைக் குடும்பத்தினர் மூலமாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் 75ஆவது பிறந்தநாள் கொண்டாடிய ப.சிதம்பரத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “உங்களது பிறந்தநாள் அன்று என் இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்ற வார்த்தைகள் தமிழில் இடம்பெற்றிருந்தன.
இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 24) பகிர்ந்துள்ள ப.சிதம்பரம், “என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியைப் பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த பதிவுகளில், “பிரதமர் மோடியின் வாழ்த்துபடி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம். துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே? தற்போது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். அதில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட மற்றும் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களையும் டேக் செய்துள்ளார்.�,