ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் அமலாக்கத் துறை காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் 14 நாட்கள் சிபிஐ காவலுக்குப் பிறகு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கடந்த 16ஆம் தேதி சிறையில் வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு அக்டோபர் 24ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவல் வழங்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க சிபிஐ வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சுரேஷ் கைட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் தொடர்பாக அமலாக்கத் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் சிதம்பரத்தின் அமலாக்கத் துறை காவல் முடிந்ததையடுத்து, நேற்று பிற்பகல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவரை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிதம்பரத்தின் காவலை வரும் 7ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “சிதம்பரம் மிகவும் உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளார். சிதம்பரத்தின் குடும்ப மருத்துவர் ஐதராபாத்தில் இருப்பதால், அங்கு தங்கி சிகிச்சை பெற சிதம்பரத்துக்கு இரண்டு நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார்” என்று வாதிட்டார்.
ஆனால், துஷார் மேத்தாவோ, “தேவைப்படும்போதெல்லாம் சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியிலேயே நல்ல மருத்துவர்கள் உள்ளனர். அவருக்கு டெல்லியிலேயே தகுந்த சிகிச்சை வழங்க முடியும்” என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார், சிதம்பரத்தின் அமலாக்கத் துறை காவலை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், சிதம்பரத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, வீட்டு உணவு உட்பட நீதிமன்ற காவலில் அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.�,