கிச்சன் கீர்த்தனா: ஃபிஷ் பால்ஸ் இன் சிக்கன் சூப்!

Published On:

| By Balaji

குளிர்ச்சியான சூழ்நிலையில் ருசிக்கவென சில ஐட்டங்கள் உண்டு. எல்லா நாள்களிலும் சாப்பிடக்கூடிய உணவுகள்தான் என்றாலும், அடிக்கிற சில்லென்ற காற்றுக்கு ஆவி பறக்க சில உணவுகளைச் சாப்பிடும்போது கூடுதல் சுவையை உணர முடியும். அதற்கு இந்த ஃபிஷ் பால்ஸ் இன் சிக்கன் சூப் பெஸ்ட் சாய்ஸ்

**என்ன தேவை?**

முழு சீலா மீன் – 2 (சதைப்பகுதி மட்டும்)

கார்ன்ஃப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்

முட்டையின் வெள்ளைக்கரு – ஒரு முட்டையிலிருந்து எடுத்தது

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சிக்கன் ஸ்டாக் தயாரிக்க

எலும்புள்ள சிக்கன் துண்டுகள் – 250 கிராம்

ஸ்லைஸ்களாக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று

நறுக்கிய தக்காளி – ஒன்று

பூண்டுப்பல் – 4

மிளகு – ஒரு டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

சூப் செய்ய

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லித்தழை – கால் கப் (நறுக்கியது)

தக்காளி – ஒன்று நறுக்கியது

பட்டை – ஒன்று (அரை இஞ்ச்)

சோம்பு – அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

சிக்கன் ஸ்டாக் செய்யக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து குறைந்த தீயில் அரை மணி நேரம் வேகவிடவும். சிக்கன் வெந்ததும் அடுப்பை அணைத்து, தண்ணீரையும், வெந்த காய்கறிகளையும் வடிகட்டி தனித்தனியாக பாத்திரங்களில் எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் சோம்பு சேர்த்துத் தாளித்து, பட்டை, பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை சேர்த்து தக்காளி கரையும்வரை வதக்கி, அடுப்பை அணைக்கவும். ஆறியதும், மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். இத்தோடு ஸ்டாக் செய்தபோது வடிகட்டிய கலவையைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். இனி, அரைத்தவற்றை சிக்கன் ஸ்டாக்கோடு சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.

மீனை நன்கு கழுவி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் அரைத்த மீன் கலவை, கார்ன்ஃப்ளார், முட்டையின் வெள்ளைக்கரு, உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சூப் கொதிக்க ஆரம்பிக்கும்போது, மீன் உருண்டைகளை மெதுவாகச் சேர்த்து கொதிக்கவிடவும். மீன் உருண்டை வெந்து மிதந்து மேலே வரும்போது கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி அடுப்பை அணைத்து பவுலில் ஊற்றிப் பரிமாறவும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share