‘சைவம் அல்லது அசைவம்…’ இது இரண்டில் எது உங்களுக்கு விருப்பமான உணவு என்று கேட்டால் உடனே நம்மில் பெரும்பாலானோர் ‘அசைவம்’ என்றுதான் தலையை வேகமாக ஆட்டுவோம். சிக்கன், மட்டன் என மாமிசங்களில் எதையும் விட்டுவைக்காமல் வெளுத்துக்கட்டும் அசைவ ஆர்வலர்களை மகிழ்விக்கும் நாவூறும் பதார்த்தங்களாக க்ரில், தந்தூரி, கெபாப், மஞ்சூரியன் போன்றவை திகழ்கின்றன. இந்த வரிசையில் இந்த சிக்கன் நக்கட்ஸை செய்து வீட்டிலுள்ளவர்களின் விருப்பத்தைப் பூர்த்திச் செய்யலாம்.
**என்ன தேவை?**
சிக்கன் பிரெஸ்ட் – 250 கிராம்
கான் ஃப்ளார் – கால் கப்
மைதா – அரை கப்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
முட்டை – ஒன்று
பிரெட் தூள் (Bread Crumbs) – அரை கப்
சீஸ் – கால் கப்
மோர் – கால் கப் (அல்லது வினிகர்) – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
சிக்கன் பிரெஸ்ட்டை வினிகர் அல்லது மோர் சேர்த்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஊறவைத்த சிக்கன் பிரெஸ்ட்டில் உள்ள தண்ணீரைப் பிழிந்துவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு கீமா செய்துகொள்ளவும். அத்துடன் உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீஸ், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசையவும். 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். கார்ன்ஃப்ளார் சிறிதளவு சேர்த்து கட்லெட் போல் ஷேப் செய்யவும். முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளவும். ஒரு தட்டில் பிரெட் தூளைப் பரப்பி வைக்கவும். மைதா – கார்ன்ஃப்ளார் கலவையை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
முதலில் மைதா – கார்ன்ஃப்ளார் கலவையில் கட்லெட்டைப் புரட்டி எடுக்கவும். பிறகு முட்டைக் கலவையில் கட்லெட்டைப் புரட்டி எடுக்கவும். பின்னர் பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். பத்து நிமிடங்கள் இதை அப்படியே வைக்கவும். எண்ணெயைச் சூடாக்கவும். கட்லெட்டுகளைப் பொரித்தெடுக்கவும். சூடான, சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி.
[நேற்றைய ரெசிப்பி: மொஹல் மட்டன் கிரேவி!](https://minnambalam.com/public/2020/07/23/3/mohal-mutton-gravy)
�,