Wகோழிக்கறி கிலோ ரூ.280-க்கு விற்பனை!

Published On:

| By Balaji

கோழிக்கறி விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ கோழிக்கறி ரூ.280 வரை விற்பனை செய்யப்படுகிறது

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டமே நிலவிவந்தது. இந்த நிலையில் கோழிக்கறி தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களால் கோழிக்கறியை வாங்கவே மக்கள் பயந்தார்கள். இதனால் கோழிக்கறி விலை கடும் சரிவைச் சந்தித்தது. பின்னர் அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு நடவடிக்கைகளால் மக்களிடையே நிலவி வந்த குழப்பம் தீர்ந்தது. அதைத்தொடர்ந்து வழக்கம்போலவே கோழிக்கறி, முட்டைகளை சாப்பிட தொடங்கினர்.

ஆட்டிறைச்சியின் விலை ரூ.900 தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், அசைவபிரியர்களின் கவனம் கோழிக்கறி மீது திரும்பியது. இதனால் கோழிக்கறியின் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. இது அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு தொடங்கியபோது ஒரு கிலோ கோழிக்கறி ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு கிலோ கோழிக்கறி ரூ.180 வரை விற்பனை ஆனது. கடந்த வாரம் கோழிக்கறி விலை ரூ.220-ஐ தொட்டது. தொடர் ஏறுமுகத்தில் இருக்கும் கோழிக்கறி விலை இந்த வாரம் அதன் போக்கை காட்ட தவறவில்லை.

விடுமுறை நாளான நேற்று (மே 17) ஒரு கிலோ கோழிக்கறி ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோழிக்கறி விலை உயர்வு குறித்து சென்னை இறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் எம்.அன்வர் பாஷா குரைஷி, “சென்னையில் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, பெரம்பூர் ஆகிய மூன்று இடங்களில் ஆட்டுத்தொட்டி (ஆடு அறுவை கூடம்) உள்ளது. இந்த நிலையில் வில்லிவாக்கம், பெரம்பூர் கூடங்களை மாநகராட்சி மூடிவிட்டது. இதனால் சைதாப்பேட்டை கூடத்தில் இருந்து மட்டும் குறைவான அளவிலேயே ஆடுகள் இறைச்சிக்காக அனுப்பப்பட்டன. அதன் காரணமாக ஒரு கிலோ ஆட்டிறைச்சி விலை ரூ.900 வரை வந்திருக்கிறது.

இந்த நிலையில் ஆட்டிறைச்சி விலை உயர்வு காரணமாக மக்கள் ஒருவித தயக்கம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து கோழிக்கறி மீது கவனத்தை வைத்தனர். இதனால் கோழிக்கறிக்கு தேவை அதிகமாக இருந்து வந்தது. சென்னைக்கு கொண்டு வரப்படும் கோழிகளின் வரத்து குறைந்துள்ளதும் விலை உயர்வுக்குக் காரணம்” என்றார்.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share