P5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி!

Published On:

| By Balaji

மதுரையில் பிரியாணி கடை திறப்பு விழாவையொட்டி 5 பைசாவிற்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சமீப காலமாக புழக்கத்திலிருந்து விடுபட்ட பழைய,5 பைசா, 10 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய் நோட்டு ஆகியவை வைத்து மார்க்கெட்டிங் செய்வது அதிகரித்துள்ளது. பழைய 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.1 லட்சம் வரையில் நீங்கள் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை நாம் கடந்து வந்திருப்போம். அதுமட்டுமில்லாமல், புதிதாக கடை திறப்பவர்கள், பழைய பைசாவுக்கு சலுகை கொடுப்பதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மதுரையில் தெற்குவாசல் சுகன்யா என்ற நிறுவனம் செல்லூர் பகுதியில் புதிதாக பிரியாணி கடையை இன்று திறந்திருக்கிறது. மக்களிடம் பிரபலம் அடைவதற்காக , கடை திறப்பன்று சிறப்பு சலுகையாக முதல் வரும் 100 நபர்களுக்கு 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, கடந்த இருநாட்களாக போஸ்டர்கள் மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.

இன்று பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது. மதியம் 12 மணிமுதல்தான் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 5 பைசாவுடன் காலை 11 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கினர்.

பிரியாணி கொடுக்க ஆரம்பித்ததும், பொதுமக்கள் வரிசையில் நிற்காமல், ஒரே நேரத்தில் கூட்டம் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், கடை உரிமையாளரை எச்சரித்து கடையை மூடும்படி கூறியதால், பிரியாணி வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கொரோனா கால கட்டத்தில் இப்படி மக்கள் கூட்டத்தை கூட்டும் அறிவிப்பை வெளியிட்ட கடை உரிமையாளர் மீது பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share