செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டியில் 2500க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் போது, சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வருகை மிக அதிகமாகும் என்பதால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி கள் மாமல்லபுரத்தில் நடைபெறுவதால் மாமல்லபுரம் கடற்கரையில் தூய்மையாக வைத்திருக்க தமிழக பேரூராட்சி துறை ஆணையர் செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார். இந்த வருட கோடை விடுமுறையில் மாமல்லபுரம் கடற்கரையில் பல சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் குப்பைகள் அதிகம் காணப்படுகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் பொழுது மாமல்லபுரம் கடற்கரை தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, நேற்று கடற்கரை கோவில் வளாகத்தில் துப்புரவு பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், நீச்சல் படை வீரர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்கு தமிழக பேரூராட்சி துறை ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நகரை தூய்மையாக வைத்திருப்போம், பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தவும் உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கின. கடற்கரையில் ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவு கழிவுகள், கிழிந்த துணிகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டன.
.