சென்னை – வேலூர் இடையே நாளை (ஆகஸ்ட் 2) முதல் முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கீழ்க்கண்ட முன்பதிவில்லா ‘மெமு’ ரெயில் நாளை (ஆகஸ்ட் 2) முதல் தினசரி இயக்கப்படுகிறது.
வேலூர் கண்டோன்மென்ட் – சென்னை கடற்கரை (வண்டி எண்: 06034) இடையே தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லா மெமு ரெயில் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் (வண்டி எண்: 06033) இடையே தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லா மெமு ரெயில் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ராமேஸ்வரம் – பைசாபாத் வாராந்திர சிறப்பு ரயில் அடுத்த மாதம் முதல் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியை இணைக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் வரை வாராந்திர ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.
அதன்படி, இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நள்ளிரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு புதன்கிழமை (செப்டம்பர் 22) அதிகாலை 5 மணிக்கு பைசாபாத் ரெயில் நிலையம் சென்றடையும்.
ஊரடங்கு நேரத்தில் போதுமான ரயில் பயணிகள் இல்லாத காரணத்தினால் சிறப்பு ரயில்கள் பல ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது முக்கிய வழி தடங்களில் சில ரயில் சேவைகளை ரயில்வே துறை அறிவித்து வருகிறது.
**-ராஜ்**
�,