சென்னை வடபழனி முருகன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகத்தை நேரில் காண்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் வருவார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், கோயில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த 2020 மார்ச் மாதம்தான் கோயில் புதுப்பிக்கும் திருப்பணி தொடங்கப்பட்டது.
திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், 14 ஆண்டுகள் கழித்து இன்று வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இதை முன்னிட்டு யாகசாலை பிரவேசம், கடந்த 19ஆம் தேதி தொடங்கி முதற்கால யாக பூஜை, ஜபம், ஹோமம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் அஷ்டபந்தன மருந்து சாற்றும் வைபவமும், ராஜகோபுரங்களில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தும் பணிகளும் நடந்தன.
தொடர்ந்து இன்று(ஜனவரி 23) காலை 9.30 மணியளவில் யாத்ரா தானம், திருக்கலசங்கள் பூஜை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்து கோயிலை சுற்றி வந்தனர்.
காலை 10 மணியளவில் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுர விமானங்களுக்கும் கலசங்கள் கொண்டு செல்லப்பட்டது. காலை 10.30 மணியளவில் கங்கை, யமுனை,சரஸ்வதி, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட புனித நதிகள் மற்றும் ராமேஸ்வரம், அறுபடை முருகன் கோயில்கள் என 15 புண்ணிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்ததால் அனைத்து ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு அபிஷேகம் செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்த போது வானத்தில் 4 கருடன்கள் வட்டமடித்தன. இதை பார்த்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.
கும்பாபிஷேகத்திற்கு அர்ச்சகர்கள், உதவியாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் .
கொரோனா பரவல் மற்றும் ஞாயிற்றுகிழமை ஊரடங்கு காரணமாக சென்னை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கும்பாபிஷேகத்தை தரிசிக்கும் வகையில் தொலைக்காட்சி, யூடியூப் சேனல் போன்றவைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இருப்பினும் கோயிலைச் சுற்றிலும் உள்ள வீடுகளின் மாடிகளிலும், தெருக்களிலும் நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பார்த்து தரிசித்தார்கள்.
கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற முருகப்பெருமான் ஆலயத்தை வலம் வந்து காட்சி அளிக்கிறார்.
**-வினிதா**
�,”