குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பல்வேறு பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில் சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், டெல்லி ஜாமியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாகவும் நேற்று காலை 11 மணியளவில் சென்னை பல்கலை மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்கலைக்கு 23ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுதி 2ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். எனினும் மாணவர்கள் வெளியேறாமல் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் அவர்களைச் சந்தித்த, பல்கலை பதிவாளர் ஸ்ரீனிவாசன், ‘பல்கலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே மாணவர்கள் வெளியே செல்லலாம். நாளை ஐடி கார்டை காண்பித்து விட்டு உள்ளே வரலாம்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் 2 மணியளவில் சில மாணவர்கள் கிளம்பி தங்களது வீட்டுக்குச் சென்றுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் வளாகத்திலேயே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்கிடையே பல்கலைக் கழகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பல்கலையை விட்டு வெளியேறிய மாணவர்கள் மீண்டும் இன்று காலை வந்து உள்ளே செல்ல முற்பட்ட போது அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. ஐடி கார்டை காண்பித்தும் அவர்களை அனுமதிக்காததால் வீட்டுக்குச் செல்லாமல் 15 மாணவர்கள் ‘கேட்’டுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் முருகன் கூறுகையில், ”வெளியே உள்ள மாணவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று பதிவாளரிடம் முறையிட்டதற்கு அவர் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். அதுமட்டுமின்றி வடமாநில மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகள் மூடப்படுவதாகவும் இன்று இரவு 9 மணிக்குள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார். விடுதியில் அசாம், டெல்லி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியுள்ளனர். தற்போது அங்குப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில இடங்களில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் மாணவர்கள் எப்படிச் செல்வார்கள்? அவர்கள் எங்குத் தங்குவார்கள்? என்பது கேள்விக் குறியாகியுள்ளது. நிர்வாகத்திடம் கேட்டதற்கும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டனர். வெளியில் இருக்கும் மாணவர்களும், தன்னார்வலர்களும் தண்ணீர் உணவு ஆகியவற்றை கேட் வழியே கொடுத்து வருகின்றனர்” என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர். இதுவரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மட்டும் வந்து ஆதரவு தெரிவித்தார். அவரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. கேட் வெளியே நின்று மாணவர்களுடன் உரையாடினார். அப்போது குடியுரிமையையே தூக்கி போட்டுவிட்டார்கள், இனி ஐடி கார்டு எதற்கு? உங்களுடைய போராட்டம் நியாயமானது. உங்களுக்கு எவ்வளவு தூரம் உதவ முடியுமோ, உதவுகிறேன் என்று கூறி ஆறுதல் தெரிவித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஐடி கார்டை காண்பித்தாலும் எங்களை உள்ளே அனுப்ப மறுக்கின்றனர் என பல்கலை மாணவர்கள் முறையிட்டனர், அப்போது பேசிய கமல், ’அகதிகள் அதிகமாகிவிட்டனர் அதனால் புதிய சட்டம் கொண்டு வருகிறோம் எனக் கூறி இருக்கிற மாணவர்களை அகதிகளாக மாற்றி வருகின்றனர்’ என்று குற்றம்சாட்டினார்.
�,”