துபாய்-சென்னை விமானத்தில் தடையை மீறி புகைப்பிடித்து ரகளை செய்த தஞ்சை பயணியை, சென்னை விமானநிலைய போலீசாா் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.
துபாயிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம், 149 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் தஞ்சை மாவட்டத்தை சோ்ந்த முகமது ரபீக் (53) என்பவரும் பயணம் செய்தாா். இவா் துபாயில் கடந்த 3 ஆண்டுகளாக தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு, விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தஞ்சை பயணி முகமது ரபீக்,அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் லைட்டரை எடுத்து விமானத்திற்குள்ளேயே புகைப்பிடிக்கத் தொடங்கினாா். இதற்கு சக பயணிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். அதோடு விமான பணிப்பெண்களும் அவரிடம்,விமானத்திற்குள் புகைபிடிக்கக்கூடாது என்று கண்டித்தனா்.ஆனால் அவா் அதைப்பற்றி கண்டுக்கொள்ளாமல் தொடா்ந்து புகைப்பிடித்தாா்.
அதோடு நான் செயின் ஸ்மோக்கா்” என்னால் புகைப்பிடிக்காமல் இருக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தாா். பயணிகள்,விமான பணிப்பெண்கள் எதிா்ப்பு காரணமாக,அவ்வப்போது சீட்டிலிருந்து, எழுந்து விமானத்தின் கழிவறைக்கு சென்று புகைப்பிடித்து வந்தாா்.இதையடுத்து விமானப்பணிப் பெண்கள்,விமான கேப்டனிடம் புகாா் செய்தனா்.
உடனடியாக விமான கேப்டன் சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.இதையடுத்து விமான பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமானநிலைய ஓடுபாதையில் தயாா் நிலையில் இருந்தனா். விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னையில் தரையிறங்கியதும்,பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் சென்றனா். பின்னர் முகமது ரபீக்கை விமானத்தை விட்டு கீழே இறக்கி அவரிடம் சோதனை செய்து முடித்தனர்.
அதன்பின்பு பயணியை சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.அதோடு இண்டிகோ ஏா்லைன்ஸ் சென்னை விமானநிலைய மேலாளா், பயணி முகமது ரபீக் மீது முறைப்படி புகாரும் செய்தாா்.இதையடுத்து சென்னை விமானநிலைய போலீசாா் முகமது ரபீக்கை கைது செய்தனா். அவா் மீது விமான பாதுகாப்பு சட்டத்தை மீறி செயல்பட்டது, பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் புகைப்பிடித்தது,சக பயணிகளுக்கு இடையூறு விளைவித்தது உட்பட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**-வணங்காமுடி**
�,”