ஆபாச வீடியோ: இன்டெர்னெட் சென்டர்களில் போலீசார் சோதனை!

Published On:

| By Balaji

குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பகிர்வதற்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று சென்னை இன்டெர்னெட் சென்டர்களில் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள், பகிர்ந்தவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி குழந்தைகளைக் காட்சிப்படுத்திய ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகத் திருச்சியில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் (42) என்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதுபோன்று சென்னையில் சூளைமேட்டைச் சேர்ந்த மோகன்(72) என்ற முதியவர் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு ஆபாச வீடியோக்களை காண்பித்ததாகவும், அந்த மாணவி அளித்த புகாரின் பேரிலும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையே ஏடிஜிபி, குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பார்த்த மற்றும் பகிர்ந்த 30 பேர் கொண்ட லிஸ்ட் சென்னையில் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் 30 பேர்களின் ஐ.பி முகவரிகளைக் கொண்டு இன்டர்நெட் சென்டர்களில் பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படங்கள் தொடர்பாக இன்டர்நெட் சென்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share