|பாலியல் தொல்லை: குழந்தைகளை காக்க வரும் ‘தோழி’!

Published On:

| By Balaji

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலத்தை பேணுவதற்கு தோழி என்ற புதிய திட்டத்தைச் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று (நவம்பர் 8) தொடங்கி வைத்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பள்ளி, டியூசன் சென்ட்டர் என எந்த இடத்திலும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைதான் இருக்கிறது. இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலத்தை பேணுவதற்கு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை காவல்துறை.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுபவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ‘தோழி’ என்ற திட்டத்தைச் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று (நவம்பர் 8) தொடங்கி வைத்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், இதன் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தைச் செயல்படுத்தச் சென்னையில் உள்ள மகளிர் காவல் நிலையங்களை சேர்ந்த 70 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்று முதலே கவுன்சிலிங் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஏதுவாக பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைகளை அணுகும் முறை குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் மனநல மருத்துவர் ஷாலினி பயிற்சி அளித்தார்.

இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கு நிர்பயா முத்திரையும், இளஞ்சிவப்பு வண்ண சீருடையும் வழங்கப்பட்டது. முன்னதாக ’சென்னையின் மூன்றாம் கண்’ என மாநகர் முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் குற்றங்கள் குறைந்ததாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிசிடிவி அமைக்கப்பட்டதற்காகச் சென்னை காவல்துறைக்கு, சிறந்த மேலாண்மைக்காக வழங்கப்படும் ஸ்கோச் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ‘தோழி’ திட்டத்தைக் காவல் துறை ஆணையர் தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share