உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு சென்னை சாந்தோம் புனித தோமையார் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. முதல்வர், ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 100 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது என்பது தொடர்கதையாகிவிட்டது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், காவல்துறை கட்டுப்பாட்டையும் மீறி பைக் ரேஸ் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்றிரவு பைக் ரேஸில் ஈடுபட்டதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் சாலை, அடையாறு மேம்பாலத்தில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் அடையாறு, அண்ணா சதுக்கம், மயிலாப்பூர் சிட்டி சென்டர், மெரினா கடற்கரைச் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு, அதிக வேகத்துடன் இருசக்கர வாகனத்தை இயக்கியவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 100க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ்முக் ஷேகர் சஞ்ஜய் தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துணை ஆணையர் தேஷ்முக் ஷேகர் சஞ்ஜய் கூறுகையில், “கொண்டாட்டங்களை பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும். பெற்றோர்கள் எதிர்வரும் புத்தாண்டின் போது பைக் ரேஸில் ஈடுபடாதவாறு தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். புத்தாண்டின் போது பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொண்டாட்டத்தின் பேரில் காமராஜர் சாலையில் அதிவேகமாகச் சென்ற காரின் பின்புற இருக்கையிலிருந்து வெளியே வந்த இரு பெண்கள் கூச்சலிட்டு ஆடியது அங்கிருந்தவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
�,”