தேர்தல் நேரத்தில் விவசாயியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பித் தரச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, ஆண்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணபிள்ளை. விவசாயியான இவரது தோட்டத்தில் வாக்காளர்களுக்குக் கொடுக்க வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி 6.78 லட்சம் ரூபாய், 2016 தேர்தலின்போது பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சவுக்கு மரம் விற்றதன் மூலம் கிடைத்த பணம் இது என்றும் இதைத் திருப்பித் தரக் கோரியும் கண்ணபிள்ளை தாக்கல் செய்த மனுவை வானூர் முன்சீப் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தனது பணத்தைத் திருப்பி தரக் கேட்டு அளித்த மனுவைப் பரிசீலிக்கவில்லை என்பதால் ஆண்டுக்கு 12 சதவிகித வட்டியுடன் பணத்தைத் திருப்பித்தரக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
.
இந்த மனுவை நேற்று (டிசம்பர் 29) விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விவசாயி கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை வழங்க மறுக்க முடியாது என்று கூறி நான்கு வாரங்களில் பணத்தைத் திருப்பி வழங்க உத்தரவிட்டார்.
மேலும், பணத்தைத் திருப்பி கேட்டு அளித்த விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்காமல் தங்கள் கடமையைத் தவறக் கூடாது என்று வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
**-பிரியா**�,