சென்னையைச் சேர்ந்த வட இந்தியரின் பெண் லவ் ஜிகாத் மூலமாக பங்களாதேஷுக்கு கடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. வழக்குத் தொடுத்திருக்கிறது. வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் சென்னை ராயபுரத்தில் தொழில் செய்து வந்தார். அவரது மகள் உயர் கல்விக்காக லண்டன் சென்று படித்தார்.
அப்போது பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நஃபீஸ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. இந்த வகையில் நஃபீஸ் அந்த சென்னைப் பெண்ணை, தனது தந்தை ஷெகாவத் உசேன், யாசிர், நவுமன் அலி கான் ஆகியோருடன் பங்களாதேஷுக்கு கடத்திச் சென்றிருக்கிறார். அங்கே அந்த சென்னைப் பெண் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டு, ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டார். பாலியல் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார். கிடைத்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் சென்னையிலுள்ள தனது தந்தைக்கு இந்த விவரத்தைச் சொல்லியிருக்கிறார். உடனடியாக அந்தப் பெண்ணின் தந்தை பங்களாதேஷில் இருக்கும் நஃபீஸை தொடர்புகொண்டு தனது மகள் பற்றி விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் பெருமளவிலான பணத்தைக் கொடுத்தால் பெண்ணை விட்டுவிடுகிறோம் என்று சொல்லியுள்ளார்கள். இதுபற்றி கடந்த மே மாதம் 21 ஆம் தேதி, அந்தப் பெண்ணின் தந்தை சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார். இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு (சிசிபி) அனுப்பப்பட்டது.
ஆரம்ப கட்ட விசாரணை நடத்திய சிசிபி அதிகாரிகள்… ‘இந்த வழக்கு வெளிநாடுகள் தொடர்புடையது என்பதால் டெல்லியில் இருக்கும் என்.ஐ.ஏ. காவல்நிலையத்துக்கு மாற்றலாம்;’ என்று டிஜிபிக்கு பரிந்துரைத்தனர். அதன்படி டிஜிபி தமிழக அரசுக்குக் குறிப்பு அனுப்ப, அரசின் மூலம் இந்த வழக்கு டெல்லி என்.ஐ.ஏ. காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்திய பிரஜையான சென்னைப் பெண்ணை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பங்களாதேஷ் குடிமகன் நஃபீஸுக்கு எதிராக புகார் அளிப்பது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து தகவல் கிடைத்த பின், இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது. நஃபீசின் தந்தை ஷெகாவத் பாகுல் பங்களாதேஷ் முன்னாள் எம்பி ஆவார். இவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் இவ்வழக்கில் என்.ஐ.ஏ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. “லவ் ஜிகாத் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது” என்று என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்ததாக டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
**-வேந்தன்**�,