சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள் விதிகளை மீறினால் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுப்பாட்டுப் பகுதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் சென்னை மாநகராட்சி இன்று (ஜூலை 11) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் அங்காடிகள் , தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு கடைகளும் தமிழக அரசு பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கச் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, மேற்குறிப்பிட்ட கடைகளில் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 81 சந்தை பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் கோட்ட உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளரைத் தலைவராகக் கொண்டு 81 சந்தை ஒழுங்குபடுத்தல் குழுக்களும், வட்டாட்சியர்கள் தலைமையில் 32 கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் அந்தந்த பகுதிகளில் இயங்கும் கடைகளைக் கண்காணிக்கும். இதில் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட கடை அல்லது அங்காடிகள் அபராதத்துடன் 14 நாட்கள் மூடி சீல் வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
கடைகளுக்குக் கிருமி நாசினி தெளித்து, சமூக இடைவெளி, நேரக் கட்டுப்பாடு ஆகியவற்றைச் சென்னை மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு அனைத்து சந்தைப் பகுதிகளும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் காவல் நிலையம் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
**-கவிபிரியா**�,