தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிக்கு தமிழ்நாடு அரசு முற்றிலும் தடை விதித்தது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில், மரப்பொருட்கள், காகிதக் குழல்கள், துணி,காகிதம், சணல் பைகள், காகிதம், துணி கொடிகள், பீங்கான் பாத்திரங்கள்,மண் கரண்டிகள் மற்றும் மண் குவளைகள் போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இருப்பினும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படவில்லை.
இதுகுறித்து நேற்று(ஆகஸ்ட் 26) சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் பயன்பாட்டில்தான் இருக்கிறது.
அதனால், அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பவர்களிடம் இருந்து பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு முதல் முறை ரூ.25,000மும், இரண்டாவது முறை ரூ. 50,000மும் மற்றும் மூன்றாவது முறை ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
துணிக் கடைகள் வணிக வளாகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு முதல்முறை ரூ.10,000மும், இரண்டாவது முறை ரூ.15,000மும், மற்றும் மூன்றாவது முறை ரூ.25,000மும் அபராதம் விதிக்கப்படும்.
அங்காடிகள் மற்றும் மருந்தகங்களுக்கு முதல் முறை ரூ.1000மும், இரண்டாவது முறை ரூ.2000மும், மற்றும் மூன்றாவது முறை ரூ. 5000மும் அபராதம் விதிக்கப்படும்.
சிறு வணிக அங்காடிகளுக்கு முதல் முறை ரூ.100மும், இரண்டாவது முறை ரூ.200மும், மற்றும் மூன்றாவது முறை ரூ.500மும் அபராதம் விதிக்கப்படும்.
மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட பின்னும் விதியை மீறி நான்காவது முறை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் அங்காடிகளுக்கு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,390 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்காக 3 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,