சென்னை மாநகராட்சியில் மண்டலம் 9, 10, 13 ஆகிய 3 மண்டலங்களில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ராம்கி என்ற நிறுவனம் துப்புறவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தில் அதிகாரிகள், தொழிலாளர்கள் என 5,116 பேர் பணி புரிகின்றனர். இந்நிறுவனம் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி பணத்தை வழங்கக் கோரி சிஐடியு சார்பில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள ராம்கி நிறுவனத்தின் தலைமையகத்தை பொதுச் செயலாளர் சீனிவாசலு தலைமையில் துப்புறவு தொழிலாளர்கள் இன்று (மார்ச் 2) முற்றுகையிட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் பேசிய சங்கத்தின் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், “மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 12 மண்டலங்களில் 5 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. ஆனால் ராம்கி நிறுவனம் துப்புறவு பணி மேற்கொள்ளும் 3 மண்டலங்களில் மட்டும் 3 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படுவதாக கணக்கு காட்டப்படுகிறது. 12 மண்டலங்களிலேயே 5 ஆயிரம் டன்தான் குப்பை என்றால், 3 மண்டலங்களில் மட்டும் 3 ஆயிரம் டன் குப்பை எப்படி என எந்த மாநகராட்சி அதிகாரிகளும் கேள்வி கேட்பதில்லை.
இந்த தொழிலாளர்கள் 2012ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த போது 4 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. 8 ஆண்டுகள் கடந்த நிலையில் வெறும் 8 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கூறிய குறைந்தபட்ச தினசரி ஊதியம் 379 ரூபாயை கூட இந்நிறுவனம் வழங்கவில்லை. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கடந்த 10 ஆண்டில் 10 மடங்கு ஊதியம் அதிகரித்துள்ளது” என்றார்.
மேலும், “இந்த நிறுவனத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மூலமாகத்தான் தொழிலாளர்கள் பணிக்கு சேர்ந்தார்கள். இப்போது 8 ஆண்டுகள் கடந்த நிலையில் தொழிலாளர்களை பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வா அப்போதுதான் பி.எப். பணம் வழங்கப்படும் என நிறுவனத்தின் கண்காணிப்பாளர்கள் தொழிலாளர்களை மிரட்டுகின்றனர். பி.எப். பணத்திற்கும் பாஸ்போர்ட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. பி.எப். பணம் வழங்காமல் ஏமாற்றும் இந்நிறுவனத்தின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.
இப்போது 1500 பேருக்கு பெயர், பிறந்த தேதி மாறியுள்ளதாக நிர்வாகத்தரப்பில் கூறப்படுகிறது. 8 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களின் பெயர், பிறந்த தேதி எப்படி மாறும்? ஒவ்வொரு தொழிலாளிக்கும் பி.எப். மற்றும் பணிக்கொடை என 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்க வேண்டியுள்ளது. ஏறக்குறைய 17 கோடி ரூபாய் தொழிலாளர்களின் பணத்தை இந்நிறுவனம் மோசடி செய்துள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகமும், அரசும் இந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளின் குடியிருப்புகளில் குப்பைகளை அகற்ற மாட்டோம். மேலும் வருகின்ற 16ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்துவோம். உயர்நீதிமன்றத்தில் இந்நிறுவனத்தின் மோசடி குறித்து வழக்கு தொடர உள்ளோம் ” என்றார்.
துப்புரவு தொழிலாளி முனியம்மா கூறுகையில், “சங்கத்தில் உறுப்பினராக இருந்தாலோ அல்லது ஏதாவது கேட்டாலோ, எங்கள் பகுதியில் பணி முடிந்த பிறகு வேறு பகுகளில் குப்பைகளை அகற்றச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் இரவு பணி வழங்கப்படுகிறது” என்றார்.
ஆர்பாட்டத்தின் இறுதியில் ராம்கி நிறுவன பொதுமேலாளர் ரவி, எச்.ஆர். கார்த்திக் ஆகியோரை சந்தித்து சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் 1500 தொழிலாளர்களின் கணக்கு சரி செய்யப்பட்டு பிடித்தம் செய்த பணம் செலுத்தப்படும் என்றும், பாஸ்போர்ட் இனி கேட்க மாட்டோம், ஊழியர்களை பழிவாங்க மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எனினும் இந்த பிரச்சினையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தலையிட வேண்டும் என்று கோருகிறார்கள் தொழிலாளர்கள்.
**-வேந்தன்**�,