சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

Published On:

| By Balaji

சென்னையில் இன்று (ஜனவரி 24) முதல் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்க 65 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வாகன விபத்துகளைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பும், படுகாயமும் அடைந்து வருகிறார்கள்.

சாலையில் கால்நடைகளைச் சுற்றவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதமும், கால்நடை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், இதையும் மீறி சாலைகளில் கால்நடைகள் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

முக்கியமாக காமராஜர் சாலை, வாலாஜா ரோடு, பாரதி சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை மற்றும் கோயம்பேடு காளியம்மன் தெரு ஆகிய பகுதிகளில் அதிக அளவு கால்நடை சுற்றித்திரிவதாக வாகன ஓட்டிகள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்து உள்ளனர்.

இதேபோல் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, மதுரவாயல் நெடுஞ்சாலைகளிலும் கால்நடைகளால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் முக்கிய சாலைகளில் சுற்றும் கால்நடைகளைப் பிடிக்க சிறப்புக் குழு அமைப்பது என்றும், வாகனங்களில் ரோந்து சென்று கால்நடைகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 65 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 15 வாகனங்களில் ரோந்து சுற்றி வருவார்கள். இந்த நடவடிக்கை இன்று (ஜனவரி 24) முதல் அமலுக்கு வருகிறது.

முதல் கட்டமாக வில்லிவாக்கம், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, கோயம்பேடு பகுதிகள் அடையாளம் காணப்பட்டு இந்தக் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள மாநகராட்சி அதிகாரி ஒருவர், “சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க கால்நடைகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 65 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிக அளவு கால்நடைகள் சுற்றும் இடங்களில் ரோந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

கால்நடைகள் தொடர்பாக ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிக அளவு புகார்கள் வந்துள்ளன. 15 மண்டலங்களிலும் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாலையில் சுற்றி திரிவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பிடிக்கப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மூன்று நாட்களுக்குள் ரூ.1,550 அபராதம் செலுத்த வேண்டும். உரிமம் கோரப்படாத கால்நடைகள் கோ சாலையில் ஒப்படைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share