கொரோனா: தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு!

public

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் 100க்கு கீழ் குறைந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 600ஐ நெருங்கி இருக்கிறது. கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. நேற்று புதிதாக 295 பேர் உட்பட மொத்தம் 1503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17.06.2022 நிலவரப்படி சென்னையில் பரவல் விகிதம் 8.1 ஆக இருக்கிறது. அதாவது அன்றைய தினம் 3,543 பேருக்கு சோதனை செய்ததில் 286 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி, ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய படுக்கைகள் 4893, ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் 2312, ஐசியு படுக்கைகள் 1088 என மொத்தம் 8,209 படுக்கை வசதிகள் இருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள் சிகிச்சை பெறுவது தொடர்பாக தகவலை தெரியப்படுத்துவது இல்லை என்று சென்னை மாநகராட்சிக்கு தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி இன்று (ஜூன் 19), “சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 94 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று 250 ஆக அதிகரித்துள்ளது.

அரசின் பொது சுகாதாரத் துறையின் நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தொற்று அறிகுறி உள்ளவர்கள் என கருதப்படும் நபர்கள் குறித்த விவரங்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள் குறித்த விபரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியா சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களிடம் கொரோனா தொற்று அருகில் உள்ள நபர்கள் சிகிச்சை பெறுவதாகவும் அதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் கவனத்திற்கு வருவதில்லை என்றும் தெரியவருகிறது.

எனவே, தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தனிமை படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரங்களை நாள்தோறும் மாநகர நல அலுவலருக்குஅ னுப்பி வைக்க வேண்டும். இல்லை என்றால் சென்னை நகர முனிசிபல் கார்பரேஷன் சட்டம் 1919ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

**- பிரியா **

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *