பட்டாக்கத்தியுடன் தாக்குதல்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது!

Published On:

| By Balaji

சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவரின் தலையில் பட்டாக்கத்தியால் தாக்கிய விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில், கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொள்வது என்பது தொடர் கதையாகிவிட்டது. ரூட் தல என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வந்தனர். கைது நடவடிக்கை, கல்லூரியிலிருந்து இடைநீக்கம் என குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது சற்று குறைந்துள்ளது என்று கருதப்பட்ட நிலையில் நேற்று சென்னை, சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநில கல்லூரி மாணவரை பட்டாக்கத்தியால் தலையில் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலத்தைச் சேர்ந்த நேரு மாநிலக் கல்லூரியில் பிஏ மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரி முடிந்ததும், சூளைமேடு நெல்சன் சாலை வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது நெல்சன் மாணிக்கம் சாலை பேருந்து நிலையத்தில் தனது நண்பர் பாலச்சந்திரன் நிற்பதைக் கண்ட நேரு அங்குச் சென்று அவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநில கல்லூரி மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநில கல்லூரி மாணவரான நேரு தலையில் பட்டாக் கத்தியைக் கொண்டு சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது .

படுகாயமடைந்த மாணவர் நேரு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சூளைமேடு போலீசார் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் இருந்து இரண்டரை அடி நீள கத்தியைப் பறிமுதல் செய்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாக அம்பத்தூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணவர் கார்த்திக் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே மாநிலக் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை ஆவடியில் வைத்துத் தாக்கியதற்குப் பதிலடி தரவே இவ்வாறு செய்தது தெரியவந்திருக்கிறது. மாணவர்கள் இதுபோன்று மோதல் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share