�
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும், தமிழகம், கேரளா, கர்நாடகம் என அண்டை மாநிலங்களுக்கும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் லட்சக்கணக்கானோர் சென்னை வந்து செல்கின்றனர். பயணிகளை வழியனுப்ப அவர்களது உறவினர்களும் குடும்பத்தினரும் கூட ரயில் நிலையத்திற்கு வந்து செல்வர். இதனால் எப்போதும் சென்ட்ரல் ரயில் நிலையம் கூட்டநெரிசல் உடன் பரபரப்பாகவே காணப்படும்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் தேவை இல்லாதவர்கள் நடைமேடை பகுதிகளில் நுழைவதைத் தடுக்கும் வகையிலும் நடைமேடை கட்டணத்தை உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி 10 ரூபாயாக இருந்த நடைமேடை கட்டணம் தற்போது 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடைமேடை டிக்கெட்டை, மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள டிக்கெட் எடுக்கும் மையத்திலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஐந்தாம் எண் கேட் அருகில் உள்ள பிரத்தியேக டிக்கெட் மையத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
முன்னதாக நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூபாய் 5 லிருந்து 10 ரூபாயாக ரயில்வே வாரியம் 2015இல் உயர்த்தியது. அதன்பிறகு தற்போது சென்னை சென்ட்ரலில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.�,