சென்னை அண்ணா சாலை பகுதியிலிருந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அண்ணா சாலை, சாந்தி தியேட்டர் அருகே வணிக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 3வது மாடியில் தேவராஜ் கம்ப்யூட்டர் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் செண்டர் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கம்ப்யூட்டர் சேல்ஸ் நிறுவனத்திலிருந்து முதலில் தீ பற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து பல நிறுவனங்கள் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காம் தளத்திற்கு தீ மளமளவெனப் பரவியது. இதுகுறித்து, தகவலறிந்து கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து #FireAccident #AnnaSalai pic.twitter.com/mO1Pi3yVdH
— karthick P (@karthickjourno) July 22, 2021
மேலும் கட்டிடத்தில் சிக்கியிருப்பவர்களை ராட்சத க்ரேன் மூலம் மீட்டு வருகின்றனர். திருவல்லிக்கேணி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்பு பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.
விபத்து காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னையின் முக்கியமான பகுதியிலிருந்த அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது சென்னை வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**-பிரியா**
�,”