mஉலக இளையோர் செஸ்: சென்னை வீரர் சாம்பியன்!

Published On:

| By Balaji

மும்பையில் நடந்த 18 வயதுக்குக் குறைவான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டியில், சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா(14) தங்கப்பதக்கத்தை கைப்பற்றி தமிழகத்துக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார்.

18 வயதுக்குக் குறைவானவர்களுக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டி மும்பையில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகின்றது. இந்தியா முதல்முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இப்போட்டியில் 66 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும், தமிழகத்தைச் சேர்ந்தவரான ஆர். பிரக்ஞானந்தா பங்கேற்றார். நேற்று(அக்டோபர் 12) நடந்த 11ஆவது மற்றும் இறுதிச்சுற்றில் ஜெர்மனி வீரர் வேலன்டைன் பக்லஸை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியில் அவர் 7 ஆட்டங்களில் வெற்றியடைந்து, நான்கு ஆட்டங்களை டிரா செய்தார்.

இதன் மூலம் 11 சுற்றுகளில் 9 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது தவிர இந்தியாவுக்கு மகளிர் பிரிவில் 14 வயது, 16வயது, 18 வயது ஆகிய பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்துள்ளது. உலக இளையோர் செஸ் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.

**விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு**

சென்னை வீரர் பிரக்ஞானந்தா பெற்ற இந்த பெருமைமிகு வெற்றிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் பெருகி வருகின்றன. இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டரும், ஐந்து முறை உலக சதுரங்க போட்டியின் சாம்பியனும் ஆன விஸ்வநாதன் ஆனந்த தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

“வாழ்த்துக்கள். உங்களால் மிகவும் பெருமை அடைகிறேன். சென்னையில் உங்களை அடுத்த முறை சந்திக்கும் போது, என்னிடம் உங்கள் சிறந்த விளையாட்டை காண்பிக்க வேண்டும்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share