தொடர் மழை: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு!

public

தொடர் மழை காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று பகல் உபரி நீர் திறக்கப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் நீர் மட்டம் 21.20 அடியாகும். மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

ஏரியில் இருந்து உபரிநீர் கால்வாய் வழியாக திறக்கப்படும் நீரானது செங்குன்றம், சாமியார்மடம், வடகரை, கிரான்ட்லைன், வடபெரும்பாக்கம், கொசப்பூர், மஞ்சம்பாக்கம், மணலி, சடயங்குப்பம் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் மட்டமான 24 அடியில் 21.3 அடி தற்போது நிரம்பியுள்ளது. ஏரிக்கு தற்போது நீர்வரத்து 600 கன அடியாக உள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்பட உள்ளது. இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள நத்தம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பூந்தண்டலம், வழுதம்பேடு, பழந்தண்டலம், எருமையூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர் வரத்தைப் பொறுத்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக அடையாறு கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், பாதிக்கப்படும் நிலையில் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *