pதடுப்பணை உடைப்பால் தவிக்கும் விவசாயிகள்!

Published On:

| By admin

கோவை மாவட்டம் பேரூர் அருகே தனிப்பட்ட ஆதாயத்துக்கு சிலர் தடுப்பணையை உடைத்ததால் அந்தப் பகுதி விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் அருகே நரசீபுரம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கிருந்து உருவாகி வெளியேறும் வைதேகி சிற்றோடை, பல கிலோமீட்டர் பயணப்பட்டு நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில், நரசீபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி அருகே பச்சான் வயல் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணை அமைக்கப்பட்டது. இங்கு தேக்கி வைக்கப்படும் நீரால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலம் பாசன வசதி பெற்று வந்தது.
விவசாய நிலத்தின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், வாய்க்கால் பாசனமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சிற்றோடையின் குறுக்கே, கட்டப்பட்ட தடுப்பணை கடந்த மூன்று ஆண்டுக் காலமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தனிப்பட்ட ஆதாயத்துக்கு சிலர் இந்த தடுப்பணையை உடைத்துள்ளனர்.
இதனால், நரசீபுரம் பகுதியில் நிலத்தடி நீர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாய உற்பத்தி பெரிதளவில் குறைந்துள்ளதாகவும் அங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் தென்னை, வாழை, பாக்கு, வெங்காயம் போன்ற சாகுபடி விவசாயம் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள நிலையில் தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share