-ராஜன் குறை
நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது 1972 முதல் 1981 ஆம் ஆண்டு வரை புரட்சி என்றால் ஏழை மக்கள், விவசாயிகள். தொழிலாளர்கள், மலையின மக்கள் எல்லாரும் ஆயுதம் தாங்கிப் போரிட்டு அரசை கைப்பற்றுவது என்று நினைத்திருந்தேன். நக்ஸலைட் இயக்கங்கள் அதற்குத்தான் முயற்சி செய்கின்றன என்பதும் என் எண்ணமாக இருந்தது.
**புரட்சியும் காதலும்**
அதன் பிறகுதான் ஹங்கேரிய இயக்குனர் ஸோல்டான் ஃபாப்ரி என்பவரின் ’இருபது மணி நேரம்’ () என்ற படம் பார்த்தேன். அதில் ஒரு ஹங்கேரிய கிராமத்தில் புரட்சிக்குப் பிறகு நடக்கும் பிரச்சினைகளை, அதிகாரப் போட்டிகளை சிக்கல்களை விவரித்திருந்தது. அதிலிருந்துதான் எனக்கு யாரும் ஆயுதப்புரட்சி செய்து ஆட்சியைப் பிடிப்பது பெரிய விஷயமல்ல, அதற்குப் பிறகு ஆட்சி செய்வதுதான் சவால் என்று தோன்றத் துவங்கியது.
காதலித்தவரை கரம் பிடிப்பதுதான் முதலில் பெரிய இலக்காகத் தோன்றும். உண்மையில் கரம்பிடித்த பிறகுதான் இல்லற வாழ்க்கையின் சவாலே துவங்குகிறது என்பதைப்போல. உலகில் புரட்சி நடந்த எந்த நாட்டிலும் அதிகாரப் பகிர்வில் சமத்துவம் ஏற்பட்டுவிடவில்லை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நீங்கிவிடவில்லை என்பதையும் இன்று நாம் கவனமாக யோசிக்க வேண்டியுள்ளது.
**கருத்தியல் மேலாதிக்கம்**
சே குவாரா மீது அனைவருக்கும் பெரிய ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு. அவர் கியூபாவின் அமைச்சராக தொடர்ந்து வாழாமல், பொலிவியாவிற்கு ஆயுதப் புரட்சி செய்யச் சென்றது, அங்கே கொல்லப்பட்டது இலட்சியவாதத்தின் பெரிய உதாரணமாகக் கருதப்பட்டது. கலைஞர்கள், சிந்தனையாளர்கள், இளைஞர்கள் அனைவராலும் கொண்டாடப் பட்டார். ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடுவது என்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசியல் தீர்வா என்பதே முக்கியமான கேள்வி.
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான கிராம்சி என்ற இத்தாலிய மார்க்ஸீயர், அரசியலில் ஹெஜிமனி என்ற கருத்தியல் மேலாதிக்கத்தின் முக்கியத்துவத்தை கோட்பாட்டாக்கம் செய்தார். உதாரணமாக பார்ப்பனீயம், ஜாதீயம் போன்றவை கருத்தியல் மேலாதிக்கம் என்ற வகையில் வருபவை. சமூகத்தின் ஒரு பகுதியினர், குழுவினர் தங்களுக்கு சாதகமான சிந்தனை முறையை அனைவரையும் ஏற்க வைப்பதே கருத்தியல் மேலாதிக்கம் எனப்படும்.
**அண்ணாவின் கருத்தியல் மேலாதிக்கத் தகர்ப்பு**
தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர்கள் பெரியாரும், அண்ணாவும் பார்ப்பனீய கருத்தியலிலிருந்து ஜாதீய சமூகத்தை விடுவிப்பதே மிகப்பெரிய அரசியல் பணியென்று உணர்ந்தார்கள். திராவிட இயக்கத்தின் மானிஃபெஸ்டோ என்று கருதத்தக்க ஆரிய மாயை என்ற நூலில் அண்ணா, ஆரியர்கள் படையெடுத்து தமிழகத்தை வெல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். தமிழ் மன்னர்கள்தான் ஆரிய கருத்தியலை தங்கள் அரசை நிலை நிறுத்திக்கொள்ள பின்பற்றத் துவங்கினார்கள்; அதுதான் ஆரிய மாயை என்றார். அந்த ஆரிய சிந்தனையிலிருந்து, பார்ப்பனீய, ஜாதீய கருத்தியலிலிருந்து விடுதலை பெறுவதே அரசியலின் முக்கிய நோக்காக அவர்கள் கருதினார்கள்.
காங்கிரஸ் கட்சி வட நாட்டின் பார்ப்பனீய சிந்தனைக்கு, சமஸ்கிருத இந்தி ஆதிக்கத்திற்கு இந்துத்துவ சிந்தனைக்கு தமிழகத்தையும் ஆட்படுத்திவிடலாம், அதைத்தொடர்ந்து இந்து மகாசபாவும் அதன் பார்ப்பனீய இந்துத்துவ சிந்தனையை தமிழகத்தில் பரப்பலாம் என்பதால்தான் அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை முன்னெடுத்தார்கள். ஆனால் கருத்தியல் மேலாதிக்கத்தை தகர்ப்பதே முக்கியம் என்பதால் அவர்கள் வன்முறையை நாடவில்லை.
பிற்போக்கு கருத்தியல் மேலாதிக்கத்தை தகர்ப்பது என்பதும், மாற்றாக புரட்சிகர கருத்தியலின் மேலாதிக்கத்தை நிறுவுவது என்பதும் மிகுந்த காலமெடுக்கும் அரசியல் செயல்பாடு என்பதை உணர்ந்திருந்தார்கள். இது மக்கள் மனங்களில் நிகழவேண்டியது. துப்பாக்கியால் செய்ய முடியாது.
**பிரபாகரனின் அரசியல்**
இலங்கை அரசியலைப் பொறுத்தவரை, அங்கே சிங்கள பேரினவாதம் தலைதூக்கியதும், தமிழர் உரிமைகள் நசுக்கப்பட்டதும், படுகொலைகள் அரங்கேறியதும், தமிழ்க் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை துவங்கியதும், தனி ஈழம் அமைக்க விரும்பியதும் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால் பெரும்பான்மையினரின் தேசிய அரசை, சிறுபான்மை மக்கள் ஆயுதப் போரில் வெல்ல முடியுமா, அதற்கு சர்வதேச சமூகம் அனுமதிக்குமா என்பதை குறித்த யதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் தவறியது.
அதனால் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தைக்கான சாத்தியங்களை அது பயன்படுத்தத் தவறியது. தனிநபர் அழித்தொழிப்பில் ஈடுபட்டது. சர்வதேச ஆதரவை இழந்தது. ராஜீவ் காந்தி படுகொலை ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்பதை ஈழ ஆதரவாளர்கள் புரிந்துகொள்ளவில்லை. நீலன் திருச்செல்வன், ரஜனி திரணகம என்று படுகொலைகள் பட்டியல் நீண்டது. சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான நியாயத்தை அங்கீகரிப்பவர்கள், அதற்காக விடுதலைப் புலிகள் செய்த எல்லா செயல்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா.
பிரபாகரனின் வீரம், தியாகம் ஆகியவை தமிழகத்தில் பலராலும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்படுவதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் அவர் அரசியல் ரீதியாக சரியான முடிவுகளை எடுத்தாரா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும். சிங்கள அரசை போரில் வெல்ல முடியாது என்ற யதார்த்தத்தை அங்கீகரிக்கும்போது சர்வதேச ஆதரவுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்களை எந்த அளவிலாவது செய்துகொண்டு சுயாட்சி உரிமைகளை பெற்றிருக்க வேண்டும் என்றே அரசியல் சிந்தனையாளர்கள் பலரும் கருதுகிறார்கள். யாசர் அராஃபத் ஆஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை கருதிப்பார்க்க வேண்டும்.
**அண்ணாவின் அரசியல் முதிர்ச்சி**
தேர்தலில் பங்கேற்று தமிழகத்தில் சுயாட்சியை நோக்கி நகரவேண்டுமா, அல்லது தனிநாடு கோரிக்கையை தொடரவேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது அண்ணா சிறிதும் தயங்காமல் தனிநாடு கோரிக்கையை கைவிட்டார். அதுவே அரசியல் முதிர்ச்சி. அது தமிழகத்தின் சிறப்பான வளர்ச்சியை, மக்கள் நல்வாழ்வை உறுதி செய்தது.
சீமான் என்ற அன்றைய திரைப்பட இயக்குனர் பொதுக்களத்தில் கருத்துக்களை பேசத் துவங்கும்போது அவர் சே குவாரா தேநீர்ச் சட்டை அணிபவர் என்ற பேச்சு பரவலாக இருந்தது. இப்போதெல்லாம் அவர் அதை அணிகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் பிரபாகரன் படத்தை அணிகிறார். பிரபாகரனைத் தமிழனத் தலைவர் என்று சொல்கிறார்.
தமிழக அரசியலுக்கும், சேகுவாரா, பிரபாகரன் போன்றவர்கள் வழிமுறைகளுக்கும் தொடர்பு கிடையாது. இது இறையாண்மையை மையப்படுத்திய அரசியல் அல்ல; சுயாட்சியை மையப்படுத்திய அரசியல். அரசை கைப்பற்றும் அரசியல் அல்ல; கருத்தியல் மேலாதிக்கத்தை மாற்றியமைக்கும் அரசியல். அந்த பயணத்தில் இன்னம் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது. அதற்கு ஆயுதங்களோ, ஆயுதத்தை நம்பியவர்கள் பிம்பங்களோ உதவாது.
சீனப்புரட்சியை சாதித்த மாவோ அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கிறது என்று சொன்னதாகச் சொல்வார்கள். அவர் நூறு பூக்கள் மலரட்டும்; நூறு சிந்தனைகள் முரணிக்கட்டும் என்றும் சொன்னார். நூறு துப்பாக்கிகள் முழங்கட்டும் என்று சொல்லவில்லை. பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை கொண்டாடத் தெரியாதவர்களுக்குத்தான் கற்பனாவாத கவர்ச்சி பிம்பங்கள் தேவை.
(கட்டுரையாளர் : ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com)�,”