கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – எளிய உணவுகளுக்கு மாறுங்கள்!

Published On:

| By Balaji

மழைக்காலம், குளிர்காலங்களில் சாப்பிட்டதைப் போலவே காரமான, பொரித்த உணவுகளை கோடையிலும் சாப்பிட சிலர் விரும்புவார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம்.

கோடையில் அதிகம் வியர்ப்பதால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு உடல் வறட்சியாக இருக்கும். அந்த நேரத்தில் காரமான உணவுகளைச் சாப்பிடும்போது உடல் மேலும் சூடாகி, அதிக வறட்சி ஏற்படும். இதனால் வயிற்றுப்போக்கு, செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.

மேலும், வயிற்றில் செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலங்களுடன் காரமான உணவும் கலந்து அல்சர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதனால் வெயில் காலத்தில் காரமில்லா, எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், மோர் சாதம் போன்ற எளிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.

**நீர்க்காய்கறிகள் சாப்பிடுவதற்கான நேரமிது!**

நீர்க்காய்கறிகள் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்று பயந்தவர்களும் கோடைக்காலத்தில் கட்டாயம் நீர்க்காய்கறிகள் சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்துகொண்டே இருக்கும். பசியின்மை பிரச்சினையும் வராது.

**நீராகாரம், பானகம், மோர், இளநீர், நுங்கு, நன்னாரி, கரும்புச்சாறு…**

நீராகாரம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு செரிமானத்தையும் தூண்டும். பானகம், வியர்வையால் இழந்த நீரிழப்பை ஈடுசெய்வதோடு அதில் சேர்க்கப்பட்டிருக்கிற வெல்லம் இரும்புச்சத்தையும் தரும். மோர் நம்முடைய குடல் பகுதியில் நன்மை செய்கிற பாக்டீரியாவை அதிகப்படுத்தும். கூடவே வெயில் காலத்தில் வருகிற வெப்ப கழிச்சலையும் சரி செய்யும்.

இளநீரில் இருக்கிற நுண்ணூட்டச்சத்துகள் கோடைக்காலத்தில் நம் உடல் இழக்கிற நீர்த்தன்மையை உடனடியாக மீட்டுத் தரும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால் உடல்சூட்டால் வயிற்றில் ஏற்படுகிற புண்ணை ஆற்றும்.

குழந்தைகளுக்கு வியர்க்குரு வந்தால், அதற்கான பவுடரை தடவுவதற்குப் பதில் நுங்கின் நீரைத் தடவலாம். ஒரே நாளில் வித்தியாசம் தெரியும். சாயம் சேர்க்காத நன்னாரி சர்பத்தும் நல்ல உடல் சூடு தணிப்பான்தான். சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டி சேர்க்காத, சுகாதாரமான கரும்புச்சாறும் கோடைக்கால நீரிழப்பை ஈடுகட்டும்.

**தண்ணீரை அலட்சியப்படுத்தாதீர்கள்!**

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால் பெண்கள் தொடங்கி வயதானவர்கள் வரை தண்ணீர் குடிப்பதைக் குறைப்பார்கள். இதனால் அவர்களுக்கு எளிதில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு, உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். எனவே, கோடைக்காலத்தில் தினம்தோறும் 2 – 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். கோடையிலும் கொதித்து, ஆறவைத்த நீரையே குடிக்க வேண்டும்.

சிலர் வெயில் நேரத்தில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீரை உடனே எடுத்துக் குடிப்பார்கள். உடல் வெப்பமாக இருக்கும்போது உடனே குளிர்ந்த நீரைப் பருகும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வரலாம். பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற தொற்றுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட நீரில் கிருமிகள் சேர்வதற்கும் வாய்ப்புள்ளது. அதன் மூலமாகவும் தொற்று ஏற்படலாம்.

**மண்பானைத் தண்ணீருக்கு மாறுங்கள்!**

மண்பானைத் தண்ணீர் உடல் சூட்டைத் தணிப்பதோடு, செரிமானத்தையும் அதிகரிக்கும். கூடவே நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஃபிரிட்ஜ் வாட்டர் குடிக்க வேண்டுமென்கிற தவிப்பை மண்பானைத் தண்ணீர் தணிக்கும். மண்பானைத் தண்ணீரில் சிறிதளவு சீரகமும் போட்டு வைத்துக் குடித்தால் ரத்தமும் சுத்திகரிக்கப்படும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: மாங்காய் வேப்பம்பூப் பச்சடி](https://minnambalam.com/public/2021/04/17/1/mango-neam-flower-pachadi)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share