உயிர்காத்த மருத்துவர் பெயரை குழந்தைக்கு சூட்டிய இங்கிலாந்து பிரதமர்!

public

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவருடைய துணைவியார் கேரி சைமன்ஸ் இருவருக்கும் பிறந்த குழந்தைக்கு வில்ஃப்ரட் லாரி நிக்கலஸ் ஜான்சன் என பெயர் வைத்துள்ளார்கள். இந்த பெயர் அவர்களுடைய தாத்தாக்கள் மற்றும் போரிஸ் ஜான்சனின் உயிரைக், கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து காப்பாற்றிய இரு மருத்துவர்களையும் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதை, கேரி சைமன்ஸ், கடந்த புதன்கிழமை பிறந்த குழந்தையுடனும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “இதைவிட அதிக மகிழ்ச்சியுடன் என்னால் இருக்க முடியாது. எனது இதயம் நிறைந்துள்ளது” என பதிவிட்டு லண்டன் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வெளியேறிய அடுத்த சில வாரங்களிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் தாயார் கூறும்போது, குழந்தையின் முதல் பெயர் பிரதமரின் தாத்தாவை குறிப்பதாகவும், அடுத்த வார்த்தையான லாரி என்பது தன்னுடைய தாத்தா பெயரை குறிக்கும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குழந்தையின் பெயரில் உள்ள நிக்கலஸ் எனும் வார்த்தை போரிஸ் ஜான்சன் உயிரை காப்பாற்றியதற்காக பெரும்பங்காற்றிய மருத்துவர் நிக் பிரைஸ், மற்றும் நிக் ஹார்ட் இருவரையும் குறிப்பிடுமாறு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பெயரை வைத்துள்ளதை கொண்டு பிரதமர் எவ்வளவு ஆபத்தான கட்டத்தில் இருந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது என்று செய்தி தொடர்பாளர் ஜானத்தன் பிலேக் பிபிசி செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் நிக் பிரைஸ் மற்றும் நிக் ஹார்ட் இருவரும் பிரதமருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் ”இவ்வாறு அங்கீகாரம் கிடைக்க பெற்றதற்கு நாங்கள் மிகவும் பெருமை அடைந்திருக்கிறோம். எங்களுடன் உழைத்த ஒட்டு மொத்த குழுவினருக்கும் நன்றி. ஒவ்வொரு நோயாளியும் சிறப்பான கவனிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதி செய்கிறோம். புதிய குடும்பத்துக்கு எங்களது வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் குழந்தை பிறந்து சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அலுவலகத்திற்கு சென்று தன்னுடை வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக தனது பணிகளை துவக்கி உள்ளார். பிரதமர் அலுவலகத்தின் தகவலின் படி, ஒரு சிறிய விடுமுறையை எடுத்துக் கொண்டு பிரதமர் மீண்டும் தனது பணிகளை தொடர்ந்து புரிவார் என்று கூறப்பட்டுள்ளது.

குழந்தையை பற்றிய மற்ற தகவல்கள் அடுத்த சில வாரங்களில் நமக்கு தெரியவரும் என்று செய்தி தொடர்பாளர் ஜான் பிலேக் கூறியுள்ளார். குழந்தை பிறந்ததை அடுத்து இங்கிலாந்தின் எலிசபெத் ராணி, தன்னுடைய வாழ்த்துகளை பிரதமருக்கு தெரிவித்துள்ளார் என்று பக்கிங்காம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.

** – பவித்ரா குமரேசன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *