நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இர்ஃபான் என்ற மாணவர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்ததைத் தொடர்ந்து, இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை வளையத்தில் இருக்கின்றனர். இதற்கிடையே உதித்சூர்யா சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்துவிட்டது. சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானால் ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த மனு மீண்டும் இன்று (அக்டோபர் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, உதித்சூர்யா விசாரணைக்கு ஆஜராகியிருந்தால் அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்கலாம். ஆனால் அவர் ஆஜராகவில்லை. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அதனால் முன் ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக ஏற்க முடியாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் தரப்பில் மாணவரின் வயது மற்றும் மனநல பிரச்சினையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி உதித்சூர்யாவின் பிரச்சினைக்கு அவரது தந்தையே காரணம் என்று தெரிவித்து மாணவரின் வயது மற்றும் மனநல பிரச்சினையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் மனுவாக விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார், இம்மனுவை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகத் தேடப்பட்டு வந்த மற்றொரு மாணவர் இர்ஃபான் இன்று சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகினார். தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த வாணியம்பாடியைச் சேர்ந்த இர்ஃபான் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகத் தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். உதித் சூர்யாவின் தந்தையை போலவே இர்ஃபானின் தந்தை முகமது சஃபியும் நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டிருக்கிறார். இதனால் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மாணவர் இர்ஃபான் மொரீஸியசுக்கு தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் மாணவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
அதேபோன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தருமபுரி மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாச ராஜூக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி இன்று அவர் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி டீன் சீனிவாச ராஜூ விளக்கமளித்தார். இந்நிலையில் மாணவர் இர்ஃபான் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவா முன்பு இன்று ஆஜராகியுள்ளார். அப்போது அக்டோபர் 9ஆம் தேதி வரை இர்ஃபானை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இர்ஃபான் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் மாணவர் இர்ஃபான் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் கூறுகையில், “மாணவர் இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கவில்லை. அவர் மொரீஷியஸில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பரில் இருந்து படித்து வருகிறார். இர்ஃபானின் தந்தை கைது செய்யப்பட்டதால், போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராக, நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இர்ஃபான் கொடுத்த தகவல் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்தது” என்று தெரிவித்துள்ளார்
�,”