டெல்லி வன்முறையைக் காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை, ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே கடந்த மூன்று தினங்களாக மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இதனால் வன்முறை நடைபெறும் வட கிழக்குப் பகுதியில் சில இடங்களில் மக்கள் வெளியில் வரத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள போதும் அங்கு நிலைமை பதற்றமாகவே இருந்து வருகிறது. இந்த வன்முறையால் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
நள்ளிரவில் வன்முறை குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு நடத்தினார், இதுகுறித்து இன்று நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அஜித் தோவல் விளக்கமளிப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் உள் துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி போலீஸ் மற்றும் உயரதிகாரிகளுடன் மூன்று முறை ஆலோசனை நடத்தினார்.
அதுபோன்று டெல்லியில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட எம்.எல்.ஏ.க்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். மத்திய மாநில அரசுகள் சார்பில் தொடர் ஆலோசனைகள் கூட்டம் நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஒரு சில இடங்களில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக கேஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காவல்துறையால் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நிலைமை ஆபத்தானதாக மாறி இருக்கிறது. காவல்துறை முயற்சிகளையும் மீறி, நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நம்பிக்கையை வளர்க்கவும் முடியவில்லை. இதனால் உடனடியாக ராணுவத்தை அழைத்துப் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
**கவிபிரியா**�,