பணம்கொடுத்து வெற்றிபெற திமுக முயற்சி: தமிழிசையைச் சந்தித்த எடப்பாடி

Published On:

| By Balaji

தெலங்கானா ஆளுநர் தமிழிசையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் தங்கியிருந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்டம்பர் 7) நேரில் சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “தமிழக மக்களுக்குப் பெருமை சேர்க்கும் பதவியில் பொறுப்பேற்ற தமிழிசைக்கு வாழ்த்துக் கூறினேன். தமிழிசையை தெலங்கானா ஆளுநராக நியமித்ததற்குப் பிரதமர் மோடிக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

அவரிடம் செய்தியாளர்கள் இடைத் தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்ப, “நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக பணம் கொடுத்து வெற்றிபெற முயற்சி செய்கிறது. வேலூர் மக்களவைத் தேர்தலில் பணம் கைப்பற்றப்பட்டதைத்தான் ஊடகங்களில் நாம் பார்த்தோமே. ஆனால், இரு தொகுதிகளிலும் மக்கள் செல்வாக்கோடு அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று தெரிவித்த முதல்வர், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற ஸ்டாலின் அறிவிப்புக்கும் பதிலளித்தார்.

“ஏற்கனவே எம்பிசி பிரிவுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. அதை ஸ்டாலின் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறார். அதிமுகதான் அனைத்து சமூகத்தினருக்குமான 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குச் சட்ட பாதுகாப்பைப் பெற்றுத் தந்தது” என்று முதல்வர் தெரிவித்தார்.

மேலும், “மேகதாட்டுவில் அணை கட்டக் கூடாது என வலியுறுத்தி ஏற்கெனவே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். பிரதமரிடம் கோரிக்கையும் வைத்தேன். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசின் மீது நாம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழக அரசின் முயற்சியால் மேகதாட்டுவில் அணைக்கட்டும் முடிவுக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது” என்றும் தகவல் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் தொடர்பான கேள்விக்கு, “அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில்கூட டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன. தெலங்கானா, கர்நாடகா பகுதியிலிருந்து தமிழகத்திற்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். காலம் தாழ்த்தி செல்ல வேண்டாம். அதேபோல் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share