yகட்டுமானத் துறைக்கு 25,000 கோடி நிதி: மத்திய அரசு

Published On:

| By Balaji

பாதியில் நின்றுபோன கட்டுமானத் திட்டங்களுக்குச் சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

டெல்லியில் நேற்று (நவம்பர் 6) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பாதியில் நின்றுபோன கட்டுமானத் திட்டங்களுக்குக் கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்படும்” எனக் கூறினார்.

இந்த முடிவை அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மொத்தத் தொகையான 25,000 கோடியில் அரசு மாற்று முதலீட்டு நிதியத்தில் (ஏஐஎஃப்) 10,000 கோடி ரூபாயும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் (எஸ்பிஐ) மற்றும் அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் (எல்ஐசி) கூட்டாக மேலும் ரூ.15,000 கோடியையும் வழங்கவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பாதியில் நின்றுபோன கட்டுமானத் திட்டங்களுக்குக் கடன் அளிக்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தோராயமாக மதிப்பிட்டதில் நாடு முழுவதும் 1,600 குடியிருப்பு திட்டங்கள் முடங்கியுள்ளன” எனக் கூறியுள்ளார்.

செபி விதிகளின்படி இதற்கான பணம் அளிக்கப்படுகிறது என்றும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது, இந்தத் திட்டத்தின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடன் நிதியுதவி வழங்குவதற்கான ‘சிறப்பு சாளரத்தை’ அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

செயல்படாத சொத்துகள் அல்லது திவால் நிலையில் உள்ள திட்டங்களில் இந்த நிதியைப் பயன்படுத்தலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முன்னதாக, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் முயற்சி செய்வதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

நாடு முழுவதும் 4.58 லட்சம் ஹவுசிங் யூனிட்கள் சம்பந்தப்பட்ட 1,600க்கும் மேற்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு இந்த நிதி உதவும்; மலிவு மற்றும் நடுத்தர வருவாய் வீட்டு வசதித் துறையில், பாதியில் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இறையாண்மை மற்றும் ஓய்வூதிய நிதிகளின் பங்களிப்புடன் நிதியின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று அரசாங்கம் கூறியது.

பொருளாதார மந்தநிலையாலும், பணமதிப்பழிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் கட்டுமானத் துறையிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. 2004-05 முதல் 2011-12 வரை ஒவ்வோர் ஆண்டும் சுமார் 40 லட்சம் வேலைகளை உருவாக்கிய உற்பத்தி அல்லாத வேலைகள் (பெரும்பாலும் கட்டுமானம்), 2011-12 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியது. மணல் விலை அதிகரிப்பு, கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் கட்டுமானத் துறையைக் கடந்த சில வருடங்களாக ஆட்டிவைத்தன. குறைந்து வரும் தேவை மற்றும் நூற்றுக்கணக்கான தாமதமான திட்டங்களுக்கு எதிராக ரியல் எஸ்டேட் துறை போராடி வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share