�
சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிந்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் எனவும், தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதியும், அசாம் மாநிலத்தில் 3 கட்டமாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதி அறிக்கை என தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநிலங்களில், சில மாநிலங்களுக்கு மே மாதமும், சில மாநிலங்களுக்கு ஜூன் மாதமும் பதவி காலம் முடிவடைகிறது. சட்டப்பேரவை பதவிக்காலம் முடியும் நிலையில் தான் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பே இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது. அதனால், ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். பிரதமர் மோடி நாட்டுக்கு பொதுவானவர் என்பதால், தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற 9 ஆம் தேதி(செவ்வாய் கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு வரவுள்ளது.
**வினிதா**
�,