சிபிஎஸ்இ பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கீடு செய்வது பற்றியும், முடிவு வெளியிடும் தேதி குறித்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 17) அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து மாநிலங்கள் நடத்தும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், சிபிஎஸ்இ வாரியமும், மாநில தேர்வுகள் இயக்கமும் மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்குவது என ஆலோசித்தது.
தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
அதில், மாணவர்களின் முந்தைய செயல் திறன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ம் தேதி வெளியாகும். மாணவர்களுக்கு இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்றால் விருப்பப்படும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
12ஆம் வகுப்பில் நடந்த, அலகு தேர்வு, மிட் டேர்ம், காலாண்டு, அரையாண்டு தேர்வு உள்ளிட்டவற்றிலிருந்து 40 சதவிகித மதிப்பெண்களும், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த இறுதித் தேர்வுகளிலிருந்து 30 சதவிகித மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 10ஆம் வகுப்பைப் பொறுத்தவரை 5 முதன்மை பாடங்களிலிருந்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் சிபிஎஸ்இ-யின்அறிக்கையில் , 12ஆம் வகுப்பு இண்டர்னல்/செய்முறைத் தேர்வுகளின் மதிப்பெண்களை ஏற்கெனவே சிபிஎஸ்இ போர்ட்டலில் சம்பந்தப்பட்ட பள்ளி பதிவேற்றம் செய்ததில் எந்த மாற்றமும் செய்யப்படுவதில்லை. மொத்த மதிப்பெண்களும் சம்பந்தப்பட்ட பள்ளியின் முந்தைய பொதுத் தேர்வு முடிவுகளை ஒட்டி அமைந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மதிப்பிடப்படும் மதிப்பெண்களை ஆராய ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு மூத்த ஆசிரியர்களைக் கொண்ட நடுநிலை குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
**-பிரியா**
�,