சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், மாணவர்கள் முடிவை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றன. தேர்வு நடைபெற்ற பாடங்களில் சிறப்பாக எழுதிய பாடங்களின் மதிப்பெண்களையும், உள் மதிப்பீடு அடிப்படையிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இவ்வாறு முடிவுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறை.
நேற்று முன்தினம் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்குத் தேர்வு முடிவுகள் வெளியானது. **2019ல் 83.40 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், 2020ல் தேர்ச்சி விகிதம் அதிகரித்து 88.78 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்**. அனைத்து பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் ‘சிபிஎஸ்இ டாப்பர் 2020’ யார் என்று அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில் இன்று (ஜூலை 15) 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 18 லட்சம் மாணவர்கள் இம்முடிவுக்காகக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தேர்வு முடிவை எப்படிப் பார்ப்பது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. www.cbse.nic.in, www.cbseresults.nic.in, www.results.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
Digilocker என்ற செயலியில், மாணவர்கள் தங்களது ரிசல்ட்டையும், டிஜிட்டல் மார்க் ஷீட்டையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் சார்ந்த ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் UMANG என்ற செயலி மூலம் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்த மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ரிசல்ட் அனுப்பப்படும்.
spacespace என டைப் செய்து 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பினாலும், ரிசல்ட் அனுப்பப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலை 11 மணியளவில் முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-கவிபிரியா**
�,