ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ கையிலெடுத்துள்ள நிலையில், இவ்வழக்கின் சர்ச்சைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஒருவர், செப்டம்பர் 14ஆம் தேதி ஆதிக்கசாதியைச் சேர்ந்த 4 பேரால் வன்கொடுமை செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வழக்கில் ஆரம்பம் முதலே போலீசாரின் நடவடிக்கைகள் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அனுமதி மறுத்தது, உடலை குடும்பத்தினரிடம் கொடுக்காமல் போலீசாரே எரித்தது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரருக்கும், குற்றவாளியான சந்தீப்புக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தது, அதோடு அந்த பெண் வன்கொடுமையே செய்யப்படவில்லை என்று கூறியது என போலீசாரின் அனைத்து செயல்களும் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையிலே இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மாநில அரசின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்த நிலையில், இதுவரை 19 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மத்திய அரசிடம், முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அக்டோபர் 3ஆம் தேதி கோரிக்கை வைத்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உபி அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதுபோன்று உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே ஹத்ராஸ் சம்பவம் குறித்து தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அக்டோபர் 12ஆம் தேதி, உபி அரசின் உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அதுபோன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவிக்கை வெளியிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை காசியாபாத் சிபிஐ குழு நேற்று முறைப்படி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. உத்தரப்பிரதேச காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் வழக்குகளை மீண்டும் பதிவு செய்துள்ளதாகவும் விசாரணை முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரைப் பெரும்பாலானவர்கள் மனிதர்களாகக் கூட கருதுவதில்லை என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை. ஹத்ராஸ் பெண்ணை அவர்கள் ஒரு மனிதராகக் கருதாததால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என முதல்வரும், காவல்துறையினரும் கூறி வருகின்றனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
**-பிரியா**�,