பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக மாருதி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் கட்டார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மாருதி உள்ளது. ஜெகதீஷ் கட்டார், மாருதி நிறுவனத்தில் 1993இல் இருந்து பணியாற்றி 2007இல் நிர்வாக இயக்குநராக ஓய்வுபெற்றார். மாருதியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 2009ஆம் ஆண்டு புதிய நிறுவனமான கார்னேஷன் ஆட்டோ இந்தியா லிமிடெட்டைத் தொடங்கினார். இது காரில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யும் மற்றும் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனமாகும். இதற்காக 2009ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து ரூ.170 கோடியைக் கடனாக வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்தக் கடனுக்காக வங்கியில் அடமானம் வைத்த அசையா சொத்துகளை வங்கியின் கவனத்துக்கு கொண்டுவராமலேயே விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக 110 கோடி ரூபாய் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டதாக ஜெகதீஷ் கட்டார் மீது வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் டிசம்பர் 20ஆம் தேதி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வு பிரிவின் எஃப்ஐஆரில், கட்டார் மற்றும் அவரின் நிறுவனத்தினால் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை துவக்கப்பட்டு உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேசி இருக்கும் ஜெகதீஷ் கட்டார், ஒரு வழக்கமான வழிமுறையை வங்கி தொடர்வதாகவும், சிபிஐ வந்து விசாரித்ததில் எந்த விதமான தவறுகளும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.�,