பெயரைச் சொல்லும்போதே நாவில் எச்சில் ஊரும் சைடிஷ் சுக்கா. அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த மட்டன் சுக்காவைப் போல், சைவ பிரியர்களை அசத்த இந்த காலிஃப்ளவர் சுக்கா பெஸ்ட் சாய்ஸ். அனைத்து வகையான உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள உதவும். அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.
**என்ன தேவை?**
காலிஃப்ளவர் – ஒன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி – இரண்டு
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – நான்கு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தனியா (மல்லி) – ஒன்றரை டீஸ்பூன்
பூண்டு பற்கள் – 8
தயிர் – இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – மூன்று டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
**எப்படிச் செய்வது?**
காலிஃப்ளவரில் உள்ள பூக்களைத் தனித்தனியாகப் பிரித்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் பூண்டு பற்கள், சீரகம், தனியா (மல்லி), காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், அதில் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி, தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இவற்றுடன் வேகவைத்த காலிஃப்ளவர் சேர்த்து மசாலா பூக்களின் மேல் நன்றாக ஒட்டும் வரை கிளறவும். கடைசியாக கெட்டியான தயிர் சேர்த்துக் கலந்து நன்கு புரட்டி, கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
**[நேற்றைய ரெசிப்பி: கேரட் குடமிளகாய் வதக்கல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2022/06/29/1/carrot-capsicum-vadhakkal)**
.